வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்?- வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்
தீபாவளி அன்று மழை பெய்யுமா? என்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு தான் கணிக்க முடியும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, “தென் மேற்கு பருவமழை அக்.16-18 க்குள் விலகி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உள்ளது. இயல்பைவிட வட மாவட்டங்களில் அதிக மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தென் மாவட்டங்களில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர மாதங்களில் 44 செ.மீ. மழை பதிவாவது வழக்கம். நடப்பாண்டில் 50 செமீ வரை கூடுதல் வட கிழக்கு பருவமழைக்கு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை காரைக்காலில் தொடங்கும். 2025 ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அக்டோபர் 22 ஆம் தேதி உருவாகி, அதற்கடுத்த 2 நாட்களில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அக்டோபர் 1 முதல் தற்போது வரை தமிழகத்தில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது” என்றார்.