தொடரும் எதிர்பார்ப்பு: எப்போது நடக்கும் சென்னை மாமன்ற கூட்டம்?
சென்னை மாநகராட்சியில் மக்கள் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடத்தி அதற்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு மாத இறுதியிலும் மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெறும் மாமன்ற கூட்டத்தில், 200-க்கும் மேற்பட்ட வார்டுகளின் கவுன்சிலர்கள் கலந்துகொண்டு மக்கள் பிரச்சினைகளை எடுத்துரைத்து அதற்கான திட்டங்களையும் தீர்வுகளையும் கேட்டுப் பெறுவர்.
மேலும் சென்னையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகளின் நிலை, பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும். மேலும் மாத துவக்கத்தில் வார்டு கமிட்டி கூட்டமும் நடத்தப்படுவது வழக்கம்.
தேர்தலுக்கு முன்பாக கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி கடைசியாக மாமன்ற கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு கடந்த, மார்ச் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களில் மாநகராட்சி மன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.
தேர்தலுக்குப் பிறகு கடந்த மே 7-ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டதால், மே மாதத்திற்கான வார்டு கமிட்டி கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தக் கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மே மாதத்திற்கான மாமன்ற கூட்டம், மாத இறுதியில் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் நடத்தப்படாமல் இருந்தது மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஏமாற்றத்தையே தந்தது.
இந்த சூழலில் சென்னை மாநகராட்சி ஆணையராக செயல்பட்டு வந்த குமரகுருபரன் இடமாற்றம் செய்யப்பட்டு, அந்த பொறுப்பில் ஜி.எஸ்.சமீரன் நியமிக்கபபட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஜி.எஸ் சமீரன் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் இந்த ஆய்வு பணிகளில் சென்னை மாநகராட்சியின் மேயர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக சென்னை மாநகராட்சி ஆணையருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா களப்பணிகளை ஆய்வு செய்வது வழக்கம். ஆனால் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சென்னை மாநகராட்சியின் அனைத்து பணிகளையும் மாநகராட்சி ஆணையரே கண்காணித்து வருகிறார்.
ஆனால் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டதால் சில மாதம் ஓய்வில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் ஒரு வாரத்திற்கு முன்பாக, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மீண்டும் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து பணிகளை துவங்கியதாக கூறப்படுகிறது.