நாங்கள் ஆட்சி வந்தவுடன் எங்கள் முதல் வேலையே இது தான் - டி.டி.வி.தினகரன்..!
கும்பகோணம் பழைய மீன் அங்காடி பகுதியில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், "மறைந்த ஐயா ஜி.கே.மூப்பனாரின் வியக்க வைக்கும் பண்பால், அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதையும் மதிப்பும் உண்டு. கும்பகோணம் தொகுதியில் 1991-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ராமநாதன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.
அதன் பிறகு 1996 மற்றும் 2001 தேர்தல்களில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் இந்த தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் மக்களின் அடிப்படைத் தேவைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக, கழிவுநீர் கால்வாய் பிரச்சனைகள், சாலை வசதி பிரச்சனைகள் இன்னும் தொடர்கின்றன.
2,500 பேருந்துகள் வந்து செல்லும் வசதி கொண்ட கும்பகோணம் மாநகர் மத்தியில் தற்போது இயங்கி வருகிறது. இதை சிலர் தங்கள் சுயலாபத்திற்காக 10 ஏக்கர் நிலத்தை அரசிற்கு தானமாக கொடுத்து அதில் புதிய பேருந்து நிலையத்தை கொண்டு வர முயற்சி செய்தனர். நீதிமன்றம் வாயிலாக தற்போது அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. நீதிமன்றமே இதனை பார்த்து எள்ளி நகையாடியது.
திமுகவினரின் தரும் ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய்க்கு நீங்கள் ஆசைப்படக் கூடாது. எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக தந்தையும் மகனும் ஊர் ஊராக சுற்றி வருகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் நலத்திட்டங்கள் வாயிலாக பல லட்சம் கோடி ரூபாயை இவர்கள் ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல்கள் குறித்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அம்மா ஆட்சி அமைந்ததும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அப்போது அந்த ஊழலுக்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தமிழக மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய நிலை வரும்.
திமுகவினர் விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள். காற்றில் கூட ஊழல் செய்வார்கள். 2001 மற்றும் 2011-ஆம் ஆண்டுகளைப் போல், தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ஒரு புரட்சிக்கு தயாராகி விட்டனர்.
கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுகவினர் காற்றில் பறக்க விட்டனர். குறிப்பாக, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் 100 நாட்களில் அமைப்போம் என கூறி விட்டு அதனை அமைக்காமல் மக்களை ஏமாற்றி விட்டனர்.
அதிமுக ஆட்சியில் கண்டிப்பாக கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்.
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் மணல் கொள்ளை, கனிம வளக் கொள்ளை, கொலை - கொள்ளை, கஞ்சா புழக்கம், பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன.
ஆசிரியர்கள், செவிலியர்கள், அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரின் போராட்டங்களை அரசு கண்டு கொள்ளவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் விலைவாசி பல மடங்கு உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது" என்று தெரிவித்தார்.