×

குரூப் 2 தேர்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு..!

 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) குரூப்-2 மற்றும் 2A பதவிகளில் 828 காலி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பரில் வெளியான நிலையில், குரூப்-2 பதவிகளில் 1,126 பேரும், குரூப்-2A பதவிகளில் 9,457 பேரும் தகுதி பெற்றதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. அவர்களுக்கான முதன்மைத் தேர்வு பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக, தமிழ்நாடு முழுவதும் 38 மையங்கள் அமைக்கப்பட்ட நிலையில், சென்னையில் மட்டும் நந்தனம் அரசு கலைக்கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரி, மாநிலக் கல்லூரி என 7 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 தேர்வு மையங்களில் 1800 மாணவர்களும், அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவா கல்லூரியில் 3 மையங்களில் 600 மாணவர்களும் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று தேர்வெழுத வந்த தேர்வர்களின் ஹால் டிக்கெட்டில் குளறுபடி ஏற்பட்டது. அதாவது ஹால் டிக்கெட்டில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரி இடம் பெற்றிருந்ததால் அனைவரும் அங்கு சென்றனர். ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் வருவதை பார்த்த கல்லூரி நிர்வாகம், சந்தேகத்தில் ஹால் டிக்கெட்டை வாங்கிப் பார்த்தது. ஆனால், அதில் டிஜி வைஷ்ணவா கல்லூரி முகவரியே இருந்துள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஹால் டிக்கெட்டுகளில் நந்தனம் கல்லூரியில் தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கான முகவரி டிஜி வைஷ்ணவா கல்லூரி என இடம் பெற்று இருப்பது நேற்று காலையில் தெரிய வந்தது. இதனால் அனைவரையும் சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இப்படி கடைசி நேரத்தில் கூறினால் எப்படி செல்ல முடியும்? என தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருந்த குரூப் 2 தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ரத்து செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''நேற்று நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வுக்கான (குருப்-2 (ம) 2 ஏ பணிகள்) முதன்மைத் தேர்வின் இரண்டு தாள்களான- தாள்-1- தமிழ் மொழித் தகுதித் தேர்வு மற்றும் தாள்-2 பொது அறிவு, பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு ஆகிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மறுதேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ரத்து செய்யப்பட்ட இரண்டு தேர்வுகளையும் மார்ச் 15 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மார்ச் 15 ஆம் தேதி (ஞாயிறு) காலையில் குருப் 2 ஏ விற்கான தாள் 2 ல் (OMR) பொது அறிவு, பொது நுண்ணறிவு தேர்வு நடைபெறும். மார்ச் 15 ஆம் தேதி (ஞாயிறு) மதியம் குரூப் 2 (ம) குரூப் 2 ஏ பணிக்கான தாள்-I (விரிந்துரைக்கும் வகை) தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு (Hall Ticket) 28.2.2026-க்குள் தொடர்புடைய அனைத்து தேர்வர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வர்கள் வழக்கமான முறையில் OTR எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E-Mail), குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.

வரும் 22 ஆம் தேதி காலையில் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-2 க்கான முதன்மை தேர்வு வழக்கம்போல் அதே தேதியில் நடைபெறும். இதற்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு 11.2.2026 அன்று வெளியிடப்படும் இது குறித்த தகவல்கள் அனைத்து தேர்வர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரி (E.Mail) , குறுஞ்செய்தி (SMS) மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்'' என்று அதில் கூறியுள்ளார்.