"ஆர்.எஸ்.எஸ். மற்றும் அல்-கொய்தா இடையே என்ன வித்தியாசம்?" - திக்விஜய் சிங்குக்கு மாணிக்கம் தாகூர் கடும் கண்டனம்!
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியதாவது:-ஆர்.எஸ்.எஸ். என்பது வெறுப்பின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு அமைப்பு. அது வெறுப்பைப் பரப்புகிறது. வெறுப்பிலிருந்து கற்றுக்கொள்ள எதுவும் இல்லை. அல்-கொய்தாவிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்-கொய்தா ஒரு வெறுப்பு அமைப்பு. அது மற்றவர்களை வெறுக்கிறது. அந்த அமைப்பிடமிருந்து கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது?
மக்களை ஒன்றிணைப்பது என்பதை காங்கிரஸ் போன்ற ஒரு அமைப்பிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி காங்கிரஸ் கட்சியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினார். இந்த அமைப்பு வெறுப்பு அமைப்புகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமா?.
ராகுல் காந்தி முழுமையாக மக்களுடன் இருக்கிறார், அரசாங்கத்தின் ஏகபோகத்திற்கு எதிராக மக்களுக்காகப் போராடுகிறார். நாம் அவருக்கு ஆதரவளிக்க வேண்டும், திக்விஜய் சிங்கின் இதுபோன்ற ஒரு அறிக்கை ராகுல் காந்தியின் போராட்டத்திற்கு உதவாது. கோட்சேவின் அமைப்பிடமிருந்து வெறுப்பைத் தவிர வேறு எதையும் கற்றுக்கொள்ள முடியாது. 140 வயதான காங்கிரஸ் இன்னும் இளமையாக இருக்கிறது, மேலும் வெறுப்பிற்கு எதிராகப் போராடுகிறது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான திக்விஜய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆர்எஸ்எஸ்-பாஜக-வின் அமைப்பு வலிமையைப் பாராட்டினார். அவரின் பதிவில், ‘இது என்னை மிகவும் ஈர்த்தது. பாஜகவின் தொண்டர் எவ்வாறு தலைவர்களின் காலடியில் அமர்ந்து மாநிலத்தின் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி’’ என தெரிவித்த அந்தப் பதிவில், பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருக்கு பகிர்ந்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இதை அவர் பகிர்ந்துள்ளார்.