×

தவெக அரசு வெளியிட்டிருப்பது வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை -  தங்கம் தென்னரசு..!

 

தமிழ்நாடு அரசின் நிதியமைச்சர் மரிய வில்சன், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார். குறிப்பாக, விளக்கக்காட்சிகளுடன் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அமைச்சர் மரிய வில்சன் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டின் கடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதன்படி, 2021-இல் 5 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன், தற்போது 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனுடன் பொதுத் துறை நிறுவனங்களின் 3,18,176 கோடி ரூபாய் கடனையும் சேர்த்து மாநிலத்தின் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதாவது மாநிலத்தின் ஒவ்வொரு தனிநபர் மீதும் தலா 1.28 லட்சம் ரூபாய் கடன் உள்ளது.

வருவாய் பற்றாக்குறை கோவிட் தொற்று பரவிய ஆண்டை விட அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு பல மாநிலங்கள் தங்கள் நிதி நிலையை சீரமைத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றுள்ள நிலையில், தமிழ்நாடு மட்டும் நிதி சீரமைப்பில் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

தமிழ்நாடு தனது முதல் 60 ஆண்டுகளில் திரட்டிய கடனைவிட, கடந்த 2021- 2025-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாங்கிய கடன் அதிகம். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடனுக்கான வட்டி செலுத்தும் அளவு 61 சதவீதம் அதிகரித்துள்ளது. வருவாய் பற்றாக்குறை ரூபாய் 78,324 கோடியாக உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட தமிழகம் பின்தங்கியுள்ளது" என்று பேசினார்.

இந்நிலையில், தவெக அரசின் வெள்ளை அறிக்கை ஒரு வெற்று அறிக்கை என்று முன்னாள் நிதியைமச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் நிதிநிலைமை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டுள்ளது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம் தெரியாமல் காலைவிட்டு” அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையாலும் “புஸ்வானமாக” மாறிவிட்டதை மறைக்க, “ஹைப்” ஏற்றிய அறிக்கை ஒன்றினை வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெளியிட்டு , அதனையும் “ஃப்ளாப்” ஆக்கியிருக்கிறது.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் சொல்லி பொதுமக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கி விடுவார்களோ என அஞ்சி அவர்களின் கோபக் கனலில் இருந்து தப்பித்துக் கொள்ளும் உத்தியாக (Escapism) தங்களின் இயலாமையை மறைக்கவே இந்த வெள்ளை அறிக்கை வெளியீட்டு நாடகம் நடத்தப்பட்டுள்ளதே தவிர, வேறு எதற்குமல்ல! எனினும் , உரிய விளக்கங்களை விரைவில் விரிவாகக் கூறுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெளிவாக விளக்கி கூறப்பட்டிருக்கின்றது. ஆனால், “வாணவேடிக்கை வாக்குறுதிகளை” அள்ளித் தெளித்து மக்களை ஏமாற்றி பொறுப்பிற்கு வந்துள்ள இந்த அரசு, தனது நிர்வாகத் திறமையின்மையாலும், “ ஆழம்…

— Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@TThenarasu) June 16, 2026