பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்க என்ன செய்ய வேண்டும்..? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் தேர்தல் பறக்கும்படையிடம் பணம், நகைகளுடன் சிக்கியுள்ளனர். அவர்கள் உரிய ஆவணங்கள் சமர்பித்தால் மட்டுமே அந்த பணத்தையும், பொருட்கள், நகைகளை பெற முடியும். இந்த சூழலில், தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? என்பது குறித்த அறிவிப்பை கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் மாவட்டத்தில் பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் சோதனையில் கையகப்படுத்தப்படும் பணம் உள்ளிட்ட பொருட்களை விடுவிப்பதற்கு மாவட்ட குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பறக்கும்படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி?
இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ; இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நடைபெறவுள்ள 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும், 81 பறக்கும்படை குழுவினர். 81 நிலையான கண்காணிப்புக் குழுவினர் அமைக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள், பணம் வழங்குவதை தடுக்கும் பொருட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும். PARA-16 ரொக்க விடுவிப்பின்படி, ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர், செலவினக் கண்காணிப்புக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் மாவட்டக் கருவூல அதிகாரி போன்ற மாவட்ட அளவிலான அதிகாரிகளை உள்ளடக்கிய ஒரு மாவட்டக் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
எனவே, சோதனையின் போது உரிய ஆவணங்களின்றி கைப்பற்றப்படும் பணம் உள்ளிட்ட பொருட்கள் விடுவிப்பதற்கு பொதுமக்கள் மாவட்ட குறைதீர்க்கும் குழு அலுவலக அறை எண்.223 முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் என்ற முகவரியினை நேரில் அனுகலாம். மேலும், 8300697292 என்ற தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்களுடைய பணம் உள்ளிட்ட பொருட்களை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.
இதேபோல், கடலூர் மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விதிமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்ய செந்தில்குமார் வெளியிட்டுள்ளார். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரையும் சேர்த்து மொத்தம் 5 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்தலுக்காக வேட்பாளர்கள் விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் சமயத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். வேட்பாளர் தனது அடையாளத்தை நிரூபிக்கும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது கூட்டமாக வருவதை தவிர்விக்கப்பட வேண்டும்.
பிரச்சார வாகனங்களை வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் பயன்படுத்தக்கூடாது. வேட்புமனு தாக்கல் செய்யும் போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது. வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் அலுவலகத்தில் அமைதியின்மை அல்லது ஒழுங்கு குலைவு ஏற்படும் வகையில் செயல்படக்கூடாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தன்னுடைய விவரங்களை உண்மையாக அறிவித்து அளிக்கும் சட்டபூர்வ ஆவணத்தை தேர்தல் மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஐஏஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.