×

''அடிப்பேன்'' என்று சொல்வது என்ன மாதிரியான ஜனநாயகம்?முறைத்தால் அடிப்பீர்களா.? திருமாவளவனை விளாசும் கஸ்தூரி..!

 

மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சார விழா தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க நடிகை கஸ்தூரி சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், '' தமிழகம் தலை நிமிர, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் யாத்திரை தொடங்குகிறார். இந்த யாத்திரை தொடங்கும் நன்னாளில் அவருடன் கைகோர்த்து துணையாக பாஜக நிர்வாகிகள் வந்திருக்கிறோம். தமிழகத்தை பொறுத்தவரை வளர்ந்து வரும் கட்சியாக பாஜக உள்ளது. அதற்கு ஆளும் திமுகவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்சியை நல்லபடியாக செய்திருந்தால் கூட பாஜக வளர்ந்து இருக்காது ஆனால், அவர்கள் நாளொரு குற்றமும், பொழுதொரு பலியுமாக இருப்பதால் வேறு வழியின்றி பாஜக சாதி அரசியலுக்கு எதிராகவும், வாரிசு அரசியலுக்கு மாற்றாகவும் வந்து கொண்டிருக்கிறது.'' என்றார்.

தமிழக வெற்றிக் கழகம் தே.ஜ. கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, தமிழக வெற்றிக் கழகம் கூட்டணியில் இணைய வேண்டும் என நினைக்கிறேன். இது எப்போதும் நான் சொல்லுவது தான். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்கிறவர்கள் ஒரு முகமாக இந்த தேர்தலை சந்திக்க வேண்டும். திமுக கூட்டணியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் விழும் என்ற கனவில் இருக்கிறார்கள். அதற்கு சரியான பதிலடி கொடுப்பதற்கு வலுவான கூட்டணி தேவைப்படுகிறது. '' என தெரிவித்தார்.

வழக்கறிஞர் மீது விசிகவினர் நடத்திய தாக்குதல் குறித்த கேள்விக்கு, '' இதனை விஜயின் சதி என்று சொன்னால் கூட ஏற்றுக் கொள்ளக்கூடிய நியாயம் உள்ளது. ஆணவமாக முறைத்து பார்த்ததால் அடிப்போம் என்று திருமாவளவன் சொல்கிறார். முறைத்தால் அடிப்பீர்களா.? திருமாவளவனை சார்ந்தவர்களை நாம் பேசினாலே அது பிசிஆர் குற்றம். ஆனால், ஒருவரை ''அடிப்பேன்'' என்று சொல்வது என்ன மாதிரியான ஜனநாயகம்? பட்ட பகலில் அவ்வளவு பேர் பார்க்கும் போது, வழக்கறிஞரை அடித்திருக்கிறார்கள். அடித்தது ஆணவமா, அடி வாங்கியது ஆணவமா.? என கேள்வி எழுப்பினார்.

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பேசிய கஸ்தூரி, '' ஒரு பெண்ணாக இதை பார்க்கும் போது நல்ல வேளை நாம் மேற்கு வங்கத்தில் இல்லை என பதறுகிறது. அம்மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி ஒரு பெண் தலைவர். கட்சியைத் தாண்டி பெண்கள் பாதுகாப்பு என்பது அடிப்படையானது. அந்த வகையில், தமிழக ஊடகங்களை நான் பாராட்டுகிறேன். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிடாமல் நீதிக்காக, கட்சி பாகுபாடு இன்றி செய்தி சேகரித்ததற்கு நன்றி.'' என கூறிவிட்டு சென்றார்.