கொளத்தூர் தொகுதி MLA வி.எஸ்.பாபு உயிரிழப்புக்கு என்ன காரணம்? அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்..!
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 3 உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்குப் பணி நியமன உத்தரவுகளை அமைச்சர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 'உலக நுண்ணுயிர்க் கொல்லி எதிர்ப்பு விழிப்புணர்வு' நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், ஆன்டிபயாடிக் மருந்துகளின் அதிகப்படியான பயன்பாடு குறித்துக் கவலை தெரிவித்தார். கொளத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டு 4 ஆன்டிபயாடிக் மாத்திரைகள் கொடுத்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும், தற்போது வழங்கப்படும் ஆன்டிபயாடிக் மாத்திரைகள் அடுத்த 10 ஆண்டுகளில் பலன் அளிக்காத நிலையை எட்டலாம் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகளால் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 90 சதவீத கிருமிகள் எந்த ஆன்டிபயாடிக் கொடுத்தாலும் இறக்காத நிலையில் உள்ளதாகவும், நோய்வாய்ப்பட்ட மாட்டிலிருந்து பால் கறந்து விற்கக் கூடாது என்ற விதியை மீறி வருமானத்திற்காகப் பால் விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆன்டிபயாடிக் விநியோகக் கட்டுப்பாட்டில் கேரளா முன்னோடியாக உள்ளதைப் போல், தமிழ்நாட்டிலும் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ராஜ், சளி மற்றும் காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தன்னிச்சையாக மருந்துக் கடைகளில் மாத்திரை வாங்கிச் சாப்பிடக் கூடாது என்றும், மருத்துவரின் பரிந்துரைப்படியே ஆன்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் தரம் குறித்துப் பேசிய அவர், நடப்பாண்டில் இதுவரை 876 முறை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு 115 குடிநீர் பாட்டில்கள் பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். அவற்றில் 54 பாட்டில்கள் மட்டுமே குடிப்பதற்குத் தகுதியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 5 பாட்டில்கள் தரமற்றவையாகவும், 56 பாட்டில்கள் உற்பத்தி விதிகளுக்கு முரணாகவும் இருந்ததால் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.12 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.