×

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? - 2 நாட்களில் இறுதி முடிவு

 

அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள நிலையில், அடுத்த கட்ட முடிவு குறித்து திங்கள் கிழமை ஆளுநர் தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த போது அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று முன் தினம் இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஆளுநரின் அடுத்த கட்ட முடிவு இன்னும் இரண்டு நாட்களில் தெரியவரும் என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன செந்தில் பாலாஜி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியபடி ஆளுநர் ஆர்.என்.ரவி அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் கருத்து கேட்க முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி தற்போது விடுமுறையில் கேரளா சென்றுள்ளதால் வருகிற திங்கட்கிழமைதான் டெல்லி வருவார் என்று தெரிவித்து விட்டனர். இதனால் அவர் டெல்லி வந்த பிறகு அவரிடம் ஆலோசித்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.