விஸ்வரூபம் எடுக்கும் விஜய் குடும்ப விவகாரம் - பாஜகவின் கூட்டணி கணக்கு என்ன?
விஜயை தன்பக்கம் இழுக்கும் அத்தனை ஆயுதங்களையும் இறக்கிவிட்டிருக்கிறது பாஜக-அதிமுக கூட்டணி என்கின்ற கருத்து அரசியல் களத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. நடிகர் விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்து யாருடைய வாக்குகளைப் பிரிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. விஜய் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதைத் தவிர்த்து வந்தார். கட்சி தொடங்கி பல மாதங்களுக்குப் பிறகுதான் முதல் மாநாட்டையே நடத்தினார்.
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் அவரது ரசிகர்கள் பெருமளவில் அக்கூட்டங்களில் கலந்துகொண்டது தமிழ்நாட்டு அரசியல் களத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் திரையுலகில் இருந்து வந்து எதிர்க்கட்சித் தலைவர் வரை உயர்ந்தார், அதே போல விஜய்க்கும் வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் பேசத்தொடங்கினர்.
ஆனால்,விஜயின் அடுத்தடுத்த நகர்வுகள் அவருடன் இருப்பவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமே, பொதுமக்களின் ஆதரவு அவருக்கு இல்லை என்பதை உணர்த்தியது. இந்த நிலையில் தான் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று சந்திக்காமல் தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சந்தித்தார் விஜய். அதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் அவரது அணுகுமுறை, சிபிஐ வழக்கு, வருமான வரி செலுத்தாமல் இருந்ததற்கான அபராதம் என விஜய் மீது அடுத்தடுத்த விமர்சனங்கள் எழத் தொடங்கின. இதற்கெல்லாம் பெரிய எதிர்வினையோ, விளக்கமோ அளிக்கப்படாமல் கண்டும் காணாமல் இருந்தது, வீட்டுக்குள் முடங்கியிருந்தது என அவர்மீதான நம்பிக்கை அதிகரிக்காமல் போனதற்கு விஜயும் அவரைச் சுற்றி இருப்பவர்களுமே காரணமாக அமைந்தனர்.
இந்த நிலையில் தான், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் முதலில் திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும் என்று பேசினார். அதற்கும் விஜய் தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை, திரிஷா சார்பில் தான் கண்டன அறிக்கை வெளியாகியிருந்தது.
தற்போது புதிய பிரச்னையாக விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் ஏற்கனவே பலமுறை சுமூக பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்துவிட முயன்றதாகவும் அதற்கு விஜய் ஒத்துழைக்கவில்லை என்றும், அவருக்கு ஒரு நடிகையுடன் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாகவும், இதனால் தானும், தனது குழந்தைகளும் மன உளைச்சலில் இருப்பதாகவும், விஜயின் வருமானத்திற்கு ஏற்ற ஜீவனாம்சத்தைத் தரவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதற்கும் விஜய் தரப்பில் இருந்து எந்த விளக்கமோ எதிர்வினையோ வரவில்லை. ஆனால் அடுத்த சில நாட்களிலேயே ஒரு திருமண நிகழ்வில் விஜயும் திரிஷாவும் சேர்ந்து வந்து கலந்துகொண்ட வீடியோ வெளியானது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியதுடன், விஜய் கட்சித் தொண்டர்களே விஜய்க்கு எதிராக பேசத் தொடங்கினர். என்ன நடந்தாலும் ரசிகர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்த விஜய்க்கு இது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தனது கட்சியின் ஐடிவிங் வேலைகளைப் பார்த்துக்கொள்ளும் நிறுவனம் மூலம் விஜய்க்கு ஆதரவான கருத்துகள் பரப்பப்பட்டன. ஒரு சிலர் அதை நம்பினாலும், பெரும்பாலான கட்சித் தொண்டர்கள் விஜயை வெளிப்படையாக ஆதரிப்பதில் இருந்து பின்வாங்கினர் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
இது தேர்தலிலும் எதிரொலிக்குமோ என்ற அச்சத்தில் தான் தஞ்சையில் நடந்த தவெக கூட்டத்தில் விவாகரத்து விசயத்தை நேரடியாகக் குறிப்பிடாமல் விஜயைப் பேசவைத்திருக்கின்றனர் அவருடைய வியூக வகுப்பாளர்கள். அதுவும் சரியாக எடுபடவில்லை என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
இந்த நிலையில் சங்கீதா தரப்பில் இருந்து மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. விஜயின் நீலாங்கரை வீட்டில் தான் தங்குவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று சங்கீதா மனுதாக்கல் செய்திருக்கிறார். இது தவெக ஆதரவு பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு சில விஜய் ரசிகைகளைத் தவிர பலரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்துவதில் தயக்கம் காட்டத் தொடங்கியுள்ளனர். மனைவிக்கு உரிய மரியாதையையும் உரிமையையும் வழங்காதவர், பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார். பெண்ணியம் பேசுபவரிடம் கண்ணியம் இருக்கிறதா என்று தவெக பெண் நிர்வாகியே கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
வருகின்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தான் வெல்லும் என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்லி வருகின்றன. ஆனால் பல தொகுதிகளில் அதிமுக கூட்டணியைப் பின்னுக்குத் தள்ளி விஜயின் தவெக இரண்டாம் இடம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதான் அதிமுக - பாஜக கூட்டணியைப் பீதியடையச் செய்திருக்கிறது.
கடந்த டிசம்பர் மாதமே பல்வேறு ஆய்வு நிறுவனங்களை வைத்து ஆய்வு செய்து பார்த்த பாஜக டெல்லி தலைமைக்கு, அதிமுக-பாஜக கூட்டணி கணிசமான இடங்களில் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்படும் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்திருக்கிறது. இதற்குப் பிறகுதான் கரூர் சம்பவத்துக்கு முழுமுதல் காரணம் விஜய்தான் என்று பேசத் தொடங்கியது அதிமுக. பாஜகவும் திரிஷாவை இழுத்து தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபட்டது.
மோடி, அமித் ஷா என்று டெல்லி தலைமைகள் படையெடுத்தாலும் தமிழ்நாட்டில் ஆதரவான சூழலே கண்ணுக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரமும் எடுபடவில்லை. ஒபிஎஸ் திமுக பக்கம் சென்றுவிட்டார், சசிகலா புதிய கட்சியை அறிவித்திருக்கிறார். இதே நிலை தொடர்ந்தால் தென் மாவாட்டங்களில் பல இடங்களில் அதிமுக பாஜக கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும், எப்படியாவது விஜயை என்.டி.ஏ. கூட்டணிக்கு கொண்டுவரும் வழியைப் பாருங்கள் என்று சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அமித்ஷாவுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்கின்றன கமலாலய வட்டாரங்கள்.
விஜயை வழிக்குக் கொண்டுவரும் நோக்கத்தோடுதான் அவரது விவாகரத்து விவரங்கள் பொதுவெளியில் கசியவிடப்பட்டன, விஜயுடன் இருந்துகொண்டே அவருக்கு எதிரான சதிவேலைகளைச் செய்ய சிலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெகவில் சேர்ந்த முன்னாள் பாஜக ஆதரவாளர்கள் சிலரை வைத்துத் தான் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதாம். அவரை எப்படியாவது பாஜக அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவருவதுதான் திட்டம் என்கின்றனர்; அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக சேர்ந்தால் தேமுதிகவின் நிலைதான் கட்சிக்கு ஏற்படும் என எதிர்ப்பும் கட்சியின் நிர்வாகிகள் இடையே எழுந்திருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.