"ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்ன?" - காந்தி பெயர் நீக்கம் குறித்து சி.வி.சண்முகம் விமர்சனம்..!
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை, 'விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத இயக்கம் - கிராமப்புறம்' (சுருக்கமாக விபி-ஜி ராம்ஜி) என மத்திய அரசு மாற்றியுள்ளது. இத்திட்டத்திலிருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, காந்தியின் பாரம்பரியத்தை மறைக்க மத்திய அரசு முயல்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்திலும் இந்த விவகாரம் பெரும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபையில் இது தொடர்பாகத் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இத்திட்டத்தில் மீண்டும் மகாத்மா காந்தியின் பெயரையே சூட்ட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார். காந்தியின் பெயரை நீக்குவது அவரது தியாகத்தையும், வரலாற்றையும் கொச்சைப்படுத்தும் செயல் எனத் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்தப் பெயர் மாற்றம் குறித்துச் சற்றே மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார். "திமுக அரசு இந்தத் திட்டத்தின் பெயர் மாற்றத்தை ஒரு பெரிய பிரச்சினையாகப் பேசி வருகிறது. திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டார்கள், வேலையை நிறுத்திவிட்டார்கள் எனக் கூறி அரசியல் செய்கிறார்கள்" என்று அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "மக்களுக்குத் தேவை வேலைவாய்ப்பும், வாழ்வாதாரமும் தான். என்ன பெயராக இருந்தால் என்ன? ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? எங்களுக்குச் சோறு கிடைத்தால் போதும். காந்தி பெயரை வைத்தால் என்ன அல்லது ராமர் பெயரை வைத்தால் என்ன? பெயரில் ஒன்றுமில்லை, திட்டமும் அதனால் கிடைக்கும் பயனுமே முக்கியம்" எனத் தனது பாணியில் அதிரடியாகப் பேசினார்.
மேலும், "திமுகவுக்கு இப்போது திடீரென காந்தி மேல் அதிகப் பாசம் வந்துள்ளது. முன்பு இந்திரா காந்தியைப் பச்சையாக விமர்சித்தவர்கள் இவர்கள். எங்களுக்குத் தேவையெல்லாம் மக்களுக்குத் தொடர்ச்சியாக வேலை கிடைக்க வேண்டும் என்பதுதான்" என அவர் குறிப்பிட்டார். பெயர் மாற்றத்திற்காகத் தீர்மானம் நிறைவேற்றுவதை விட, திட்டத்தின் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவரது பேச்சின் சாரமாக அமைந்தது.