தங்கைக்கு அண்ணனாக இருப்பேன் என்ற வீரவசனம் என்ன ஆனது? - முதலமைச்சர் விஜய்யை சாடிய டிடிவி தினகரன்!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
குழந்தைகள் மற்றும் பெண்களின் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் என்ற முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் வீரவசனம் என்ன ஆனது?
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வண்டிப்பாளையம் பகுதியில் 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து துன்புறுத்திய நபர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செய்தி ஏற்படுத்திய அதிர்வலைகள் அடங்கும் முன்பாகவே, தற்போது மரக்காணத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த சம்பவம் தமிழகத்தில் ஒட்டுமொத்த பெண் குழந்தைகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட நிகழ்வைக் கண்டு கொதித்தெழுந்து தங்கைகள் அனைவருக்கும் அண்ணனாகவும், அரணாகவும் இருந்து பாதுகாப்பேன் எனக் கடிதம் எழுதிய திரு ஜோசப் விஜய் அவர்கள், தான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் அன்றாடம் அரங்கேறும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களைக் கண்டும் காணாமல் வாய்மூடி மௌனம் காப்பது ஏன் ?
எனவே, சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் கைதான குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையை பெற்று தருவதோடு, தனது ஆட்சியைப் பாதுகாப்பதில் செலுத்தும் கவனத்தைக் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பிலும் செலுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.