×

வாக்கு எண்ணும் நாளில் நடந்தது என்ன..?  ரகசியம் உடைத்த மாணிக்கம் தாகூர்..! 

 

மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், "சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பொறுப்போடு பேச வேண்டிய இடத்தில் இருக்கிறார். ஆனால் அவர் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது வருத்தமளிக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க தோளில் சுமந்த கட்சி காங்கிரஸ்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது டெல்லியில் இருக்கும் பாஜக தலைமையின் ஆணைக்கிணங்க, திமுகவும் அதிமுகவும் இணைந்து தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க திட்டமிட்டதாக ஒரு பகீர் தகவலை உடைத்தார். கடந்த மே 4-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணியளவில், பாஜகவின் முக்கியத் தலைவர் ஒருவர் அதிமுக மற்றும் திமுக தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசியதாகவும், தமிழகத்தில் விஜய் ஆட்சியமைக்க கூடாது என்பதில் இரு கட்சிகளும் தீவிரமாக இருந்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

திமுகவின் ஒட்டுமொத்த கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு, எப்படியாவது அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தீவிர முயற்சி செய்ததாக மாணிக்கம் தாகூர் சாடினார். தவெக தலைவர் விஜய்யை முதலமைச்சராக்கி விடக்கூடாது என்பதற்காக அனைத்து வகையான முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இறுதியில் மக்கள் தீர்ப்பின் முன்னால் தோற்றுவிட்டார் என்று அவர் காரசாரமாகத் தெரிவித்தார்.

பாஜகவின் இந்த திட்டத்திற்கு தமிழக ஆளுநரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்ததாக குறிப்பிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு தரக்கூடத் தயாராக இருந்தது என்றார். இதனை வெளியில் கூறினால் அரசியல் ரீதியாக தவறாகிவிடும் என்பதற்காகவே காங்கிரஸ் இதுவரை அமைதியாக இருந்ததாக கூறிய அவர், திமுக தன் பொய் நாடகங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், வெகு விரைவில் பாஜகவின் துணையோடு அதிமுகவும் திமுகவும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி வைப்பார்கள் என்றும் கணித்து கூறினார்.

திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வன்மமாக பேசி, கண்டன தீர்மானம் நிறைவேற்றியதற்கு தனது பலத்த கண்டனத்தை பதிவு செய்தார். பாஜக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமிழ்நாட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ் எந்தவொரு தியாகத்தையும் செய்ய துணிந்துள்ளதாக கூறிய அவர், அதிமுக-திமாக கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் ரகசிய 'பிளானை' காங்கிரஸ் கட்சிதான் உடைத்து 'பிளாப்' ஆக்கியது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இறுதியாக, தவெக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஆட்சி என்பது மக்களுக்கான சிறந்த ஆட்சியாக இருக்கும் என்றும்; தவெக, காங்கிரஸ், விசிக இணைந்துள்ள இந்த பலமான கூட்டணிக்கு விரைவில் புதிய பெயர் சூட்டப்பட்டு ஒருமித்த கருத்துள்ள கூட்டணியாக செயல்படும் என்றும் கூறினார். மேலும், கோயம்புத்தூர் சிறுமி படுகொலை வினர்ச்சியில், தமிழக முதலமைச்சர் விஜய் அதிகாரிகளை இன்னும் வேகப்படுத்துவார் என நம்புவதாகவும், சம்பவ இடத்திற்கு உடனடியாக டிஜிபியை அனுப்பி பெண் அதிகாரி மூலம் தீவிர விசாரணை நடத்த முதல்வர் எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் பாராட்டி முடித்தார்.