×

"நச்சுனு நாலு பாய்ண்ட்"... அனைத்து கட்சி கூட்டத்தில் சிறுத்தைகள் சொன்னது இதுதான்!  

 

நீட் தேர்வில் விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதுகுறித்து வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் சந்திக்க நினைத்தனர். அதற்காக நான்கு முறை அனுமதி கேட்டனர். ஆனால் நான்கு முறையும் அவர்களை சந்திக்காமல் அலைக்கழித்தார் அமித் ஷா. இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசு மீது கடுங்கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதன் விளைவாகவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதுகுறித்து சற்று ஆவேசமாகப் பேசினார்.

அந்த உரையில் இறுதியில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க இன்று அனைத்துக் கட்சிக்கூட்டம் நடத்தப்படும் என்றார். அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதில் விசிக சார்பில் அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டர். கூட்டத்தில் முன்வைத்த ஆலோசனைகள் குறித்து கட்சி தலைமை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிட்டது பின்வருமாறு:

1.நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் எவ்வித காரணமுமின்றி முடக்கி வைத்துள்ள தமிழக ஆளுநரின் செயல் தமிழக சட்டப்பேரவையையும், தமிழக அரசையும், தமிழக மக்களையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படும் ஆளுநரை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். ஆளுநரின் நடவடிக்கை குறித்து முறையிடுவதற்காக நேரம் ஒதுக்குமாறு கேட்ட அனைத்துக் கட்சி குழுவினருக்கு நேரம் ஒதுக்காமல் ஒரு வார காலம் டெல்லியில் காத்திருக்கச் செய்து அவமதித்த மத்திய உள்துறை அமைச்சர் அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

3. நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டமாகும் வரை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடரும் என்பதால், தமிழ் வழியில் தேர்வு எழுதி நீட் தேர்வில் தகுதிபெறும் ஏழை, எளிய எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி சேருவதற்கு ஏதுவாக அவர்களுக்கு அரசே அந்த கட்டணம் முழுவதையும் வட்டியில்லா கடனாக வழங்குவதற்கு 'கடன் படிப்பு உதவித் தொகை' திட்டமொன்றை வகுத்திட வேண்டும். மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 8 லட்சத்திற்கும் குறைவாக இருக்கவேண்டும் என வரம்பு நிர்ணயிக்கலாம்.

4. தமிழக அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தமிழகத்தில் 400க்கும் அதிகமான தனியார் நீட் பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு சுமார் ரூ.5,750 கோடி சம்பாதிப்பதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் 99% பேர் இந்த மையங்களில் பயிற்சி பெற்றவர்கள். இந்த மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த எந்தவொரு சட்டமும் நமது மாநிலத்தில் இல்லை. எனவே இந்தப் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த அவசர சட்டம் ஒன்றைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்.

5. நீட் வருவதற்கு முன்பு தமிழ்வழியில் பயின்ற மாணவர்கள் சுமார் 15% பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். வந்ததற்குப் பிறகு தமிழ்வழியில் படித்த மாணவர்களில் 2%க்கும் குறைவானவர்களே சேர்ந்துள்ளனர் என நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. எனவே அரசின் சார்பில் நடத்தப்படும் நீட் பயிற்சி மையங்களில் தமிழ்வழியில் படிக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை தருவதோடு அவற்றின் தரத்தை தனியார் பயிற்சி மையங்களின் அளவுக்கு உயர்த்துவதற்கு அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நேரடி வகுப்புகள் நடத்தப்படவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.