×

கர்நாடகாவில் கொல்லப்பட்ட தமிழர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது என்ன?

 

கர்நாடகா மாநிலம், ஹானூர் வட்டம், மரியமங்கலம் வனப்பகுதிக்குள் மானை வேட்டையாட வந்ததாகக் கூறி தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் குமார் ஆகிய மூன்று பேரை கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். மற்றுமொருவர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதையடுத்து, தங்களை துப்பாக்கியால் சுட்டதால் பதிலுக்கு இத்தகைய தாக்குதலை நிகழ்த்தியதாக கர்நாடகா வனத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால், இது ஒரு திட்டமிட்ட சதி என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டினர்.

இந்த சூழலில் வனத்துறை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று தமிழர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று (ஆகஸ்ட் 24) வெளியிடப்பட்டது. அதில், பல்வேறு அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உயிரிழந்த குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவரது தலையில் அணியக் கூடிய டார்ச் லைட், பீடி துண்டுகள் மற்றும் லைட்டர் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மிக அருகிலிருந்து துப்பாக்கியில் அவர் சுடப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது வலது தொடையில் மிக அருகிலிருந்து சுடப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

தொடர்ந்து, குமாரின் இடது மார்பு மற்றும் வலது தொடையில் இருந்து அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகள் தற்போது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்தோணி சாமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவருடைய மார்பு மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் சுடப்பட்டுள்ளது. மேலும், இவரின் உள்ளாடையில் இருந்து ஷாட்கன் வகை துப்பாக்கிகளில் பயன்படுத்தக்கூடிய 9 அலுமினிய பிரைமர் வகை குண்டுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், இவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் இருந்து அகற்றப்பட்ட துப்பாக்கி குண்டுகளும் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பீட்டர் பிரேத பரிசோதனை அறிக்கையின் வாயிலாக, இவரும் மிக அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மார்பு, கழுத்து மற்றும் தொடை உள்ளிட்ட பகுதிகளில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களின் பிரேதப் பரிசோதனையானது மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி நடத்தப்பட்டிருக்கிறது. மேலும், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஹோலேமுரிதட்டி மற்றும் பெட்டேகரரா குட்டா ஆகிய பகுதிகளில் உள்ள வேட்டைத்தடுப்பு முகாம்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தி இருக்கின்றனர். இதுவரை மொத்தமாக 12 வனத்துறை அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.

குறிப்பாக, துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் ஒரேயொரு நேரடி சாட்சியான உயிர் தப்பிய மகிமை தாஸின் வாக்குமூலத்தையும் விசாரணை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் வனத்துறையின் நான்காவது குற்றவாளியாக மகிமை தாஸ் உள்ளார்.

அத்துடன், துப்பாக்கிச் சூடு தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக வனத்துறை தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், மூவரும் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கர்நாடகா மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.