பரமசிவத்தின் மரணம் எதனால் ஏற்பட்டது..? வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை..!
மதுரை மேல அனுப்பானடியை சேர்ந்தவர் பூசாரி பரமசிவம் (வயது 55). இவரது குடும்பத்தினருக்கும், இவர்களது அண்டை வீட்டில் வசிக்கும் பாலகிருஷ்ணன், மாலதி தம்பதிக்கும் இடையே கடந்த ஜூலை 17 அன்று இரவு வாகனம் நிறுத்துவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 23 அன்று சிந்தாமணி காவல் நிலையத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையினரிடம் கேள்வியெழுப்பிய பரமசிவத்தை, சிந்தாமணி காவல் நிலைய போலீசார் தாக்கியதாகவும், அதனால் ஜூலை 24 அன்று அவருக்கு தலைவலி, வாந்தி உபாதைகள் ஏற்பட்டு, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகள் வாங்கி உட்கொண்டுள்ளார்.
அதன் பின்னர், ஆகஸ்ட் 5 அன்று அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தாகவும் குடும்பத்தினர் கூறினர். இதன் பின்னர், ஆகஸ்ட் 11 அன்று தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக பரமசிவம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி, இரவு உயிரிழந்தார்.
இந்த நிலையில், பரமசிவம் உயிரிழப்புக்கு போலீசார் தான் காரணம் என குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்த குடும்பத்தினர், "இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்துமாறும், பரமசிவத்தை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில், மதுரை மாவட்ட நடுவர் மன்ற நீதிபதி முன்னிலையில், கடந்த 18-ஆம் தேதி உடற்கூறாய்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது பரவசிவத்தின் உடற்கூறாய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
அறிக்கை கூறுவது என்ன?
அதில், பரமசிவத்தின் தலையின் வலது நெற்றி மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் சுமார் 31 செ.மீ. நீளத்துக்கு ‘C’ வடிவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காயம் இருந்தது தெரிய வந்துள்ளது. அந்தப் பகுதியில் சுமார் 15 செ.மீ. × 9 செ.மீ. அளவிலான மண்டை ஓட்டுப் பகுதி அகற்றப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மூளையில் வீக்கம், மூளையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரத்தக்கசிவு மற்றும் வலது முன்மூளைப் பகுதியில் ரத்தக்கசிவு காயம் இருந்தது பதிவாகியுள்ளது. மூளைத் திசுக்கள் மென்மையாகி கூழ் போன்ற நிலையில் இருந்ததாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலின் பல்வேறு பகுதிகளில் ஊசி செலுத்தப்பட்டதற்கான தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
அதே வேளை, உடல் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆழமாக வெட்டி பரிசோதனை செய்யப்பட்ட போதிலும், வெளிப்புறமாக புதிய காயங்கள் அல்லது ரத்தக்கசிவு தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதயப் பரிசோதனையில், பெருநாடியில் கொழுப்புப் படிவங்களும், இடது கரோனரி தமனியில் சுமார் 80 சதவீத கொழுப்பு அடைப்பும் இருந்தது தெரிய வந்துள்ளது. இதயத்தின் எடை 382 கிராம் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பரமசிவத்தின் மரணத்திற்கான காரணத்தை உறுதி செய்வதற்காக வயிறு, குடல், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் ரசாயனப் பகுப்பாய்விற்கும், மூளை, இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகத் திசுக்கள் ஹிஸ்டோபாதாலஜி பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் கிடைத்த பின்னரே மரணத்திற்கான இறுதி காரணம் குறித்து மருத்துவரீதியாக கருத்து தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.