இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் அமைச்சர் நிர்மல் குமார் அவர்களே..? வானதி சீனிவாசன் அட்டாக்..!!
முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கோவை மத்திய சிறையில் இருந்து நேற்று இரவு ராகவன் என்ற கைதி தப்பியோடிய செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தேனியில் 17 கைதிகள் தப்பியோடிய சம்பவமும், அதற்கு முன்பாக புழல் சிறையில் இருந்து இரு கைதிகள் தப்பியோடிய சம்பவத்தினைத் தொடர்ந்து தற்போது கோவை மத்திய சிறையிலும் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்பினையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
சிறைத்துறை டிஜிபி-யை மாற்றம் செய்தால் மட்டும் இதுபோன்ற அஜாக்கிரதையான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடியுமா? கைதிகளை நல்வழிப்படுத்தும் சிறைகள் எந்த அளவிற்கு அவர்கள் பாதுகாப்பில் கோட்டை விடுகின்றன என்பதற்கு உதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது உண்மையாகவே சிறைச் சாலைகள் உச்சகட்ட பாதுகாப்புடன் தான் செயல்பட்டு வருகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
ஒரு துறையைச் சார்ந்த அமைச்சர்களே தங்கள் துறையில் திணறிக் கொண்டிருக்கும் போது எரிசக்தி, மின்சாரம், சட்டம், சிறைத்துறை, ஊழல் தடுப்புத்துறை என இத்தனை துறைகளை பொறுப்பில் வைத்துக் கொண்டு அனைத்திலும் தோல்வி கண்டுவிட்டு அதனைச் சமாளிக்கும் விதமாக தினந்தோறும் பேட்டிகளைக் கொடுக்க மட்டும் அமைச்சர் நிர்மல் குமார் தவறுவதில்லை. இதற்கும் என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.
குற்றவாளிகளை சுதந்திரமாக வெளியில் உலவவிட்டு வேடிக்கை பார்த்து சட்டம் ஒழுங்கை காக்க தொடர்ந்து தவறிவரும் தவெக அரசை தூய சக்தியா இல்லை தீயசக்தியா என்பதை மக்கள் விரைவில் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.