×

ஆண்ட்ராய்டு செய்த செயல்...கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..!

 

தொழில்நுட்பம் வளர வளர, நம் “தேவை”களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குளிர்சாதனப் பெட்டியும், தொலைக்காட்சிப் பெட்டியும் “வசதி உள்ளவர்கள்” வாங்கும் பொருட்களாக இல்லாமல், ” அத்யாவசியம்” என்ற வட்டத்துக்குள் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு தொலைபேசி அவசியம் என்றிருந்த காலம் மாறி ஒவ்வொருவருக்கும் கைப்பேசி அவசியம் என்பதும் ‘நாம் வாழும் இந்த’ காலத்தின் கட்டாயமே என்பதில் மாற்று கருத்து இருக்க வாய்ப்பில்லை.

10 வருடங்களுக்கு முன்பாக, வீட்டில் இணையத் தொடர்பை நிறுவ நிறைய யோசித்தோம். அப்பொழுதெல்லாம் வீட்டில் கணனி வாங்குவதே விரயம் என்று பலர் எண்ணினார்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. பரிணாம வளர்ச்சி இப்படி இருக்க, இணையத்தொடர்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. 

ஆண்ட்ராய்டு போன்கள் வந்த பிறகு பேசுவதற்கு மட்டும் இன்றி பொழுதுபோக்கு சாதனமாகவே செல்போன்கள் மாறிவிட்டன. உள்ளங்கைக்குள் உலகம் ஒன்று சொன்னது தற்போதுதான் 100 சதவீதம் பொருந்துகிறது என நினைக்கும் அளவுக்கு ஸ்மார்ட்போன்களில் பார்த்துவிட முடிகிறது. ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இயங்குதளங்கள் முன்னிலை வகிக்கின்றன.

உலகின் பெரும்பாலான ஸ்மார்ட்போன் சந்தையை இந்த இரு இயங்குதளங்களே கட்டுப்பாட்டில் வைத்து இருக்கக்கூடிய நிலையில், அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் அழைப்புகளுக்காக தோன்றும் முகப்புப் பக்கம் மாறியிருக்கிறது. Caller Interface என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த முகப்பு மாறியிருப்பது ஆண்ட்ராய்டு பயனர்கள் பலரையும் குழப்பம் அடைய வைத்துள்ளது. அழைப்புகள் வந்தால் ஏற்பதற்கு மேலே ஸ்வைப் செய்யும் முறை இருந்தது, தற்போது பக்கவாட்டில் ஸ்வைப் செய்வது போன்று மாறியிருக்கிறது. இந்த புதிய வசதியால் அழைப்புகள் வரும் போது எப்படி அதை ஏற்பது என தெரியாமல் குழம்பிப்போவதாக நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.