×

சூர்யாவை மிரட்டிய பாமகவினர்; களமிறங்கிய விஜய், அஜித் ரசிகர்கள் - ட்விட்டரில் டிரெண்டாகும் #WeStandWithSuriya 

 

நடிகர் சூர்யா நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கும் ஜெய்பீம் படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. சமூகத்தின் விளிம்பில் இருக்கும் இருளர் இன மக்களின் இன்னல்களை வெளிச்சம் போட்டு காட்டியதற்காக பெரும்பான்மையானோர் நடிகர் சூர்யாவுக்கும் படக்குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒரேயொரு காட்சியை மட்டும் பிடித்துக்கொண்டு வன்னியர் சங்கத்தினரும் பாமகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

"தியேட்டரில் ஓடும் ஜெய்பீம் படத்தை கொளுத்துவோம்" என்றார்கள். தியேட்டரில் ஓடவில்லை என சொன்னதும் அமேசான் பிரைமை அன்-இன்ஸ்டால் செய்து எதிர்ப்பை காட்டினர். உச்சக்கட்டமாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன்வைத்து கடிதம் எழுதினார். அதில், அடுத்த படம் தியேட்டரில் வெளியானால் அசாம்பாவிதங்கள் நடக்கும் என மறைமுக எச்சரிக்கையும் விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சூர்யா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், "அவரவர் வழியில் நடப்போம்” என குறிப்பிட்டிருந்தார்.

அது தான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. சூர்யாவோ நிஜ ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி பேரில் 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். மேலும் இருளர் இன குழந்தைகளைப் படிக்கவைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால் அதற்கு நேர்மாறாக மிரட்டலுடன் கூடிய அராஜக போக்கை பாமகவினரும் வன்னியர் சங்கத்தினரும் கடைப்பிடித்து வருகின்றனர். நேற்றைய தினம் மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி பேசியது அருவருக்கத்தக்கும் வகையில் அமைந்துள்ளது. நேற்று சூர்யா நடித்த வேல் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. 


இதனை ஆதரவாளர்களுடன் வந்து உடனடியாக தடுத்துநிறுத்திய பழனிச்சாமி "நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்” என்றார். அவரின் இப்பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் நெட்டிசன்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். குறிப்பாக விஜய், அஜித் ரசிகர்கள் அனைவரும் சூர்யாவுடன் துணை நிற்போம் என #WeStandWithSuriya ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இது தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. அதேசமயம் சூர்யாவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டு வன்னியர் சங்கம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.