×

‘சோறு கூட போடுவோம்; ஆனால் ஓட்டு போட மாட்டோம்’.. பாஜக நிர்வாகி பேச்சால்  அதிர்ச்சியடைந்த நயினார் நாகேந்திரன்..!!

 

‘பாஜகவினருக்கு சோறு கூட போடுவோம்; ஆனால் ஓட்டு போட மாட்டோம்’ என மக்கள் கூறுவதாக பாஜக நிர்வாகி ஒருவர் பொதுவெளியில், அக்கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

2026 சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்தத் தேர்தலை அதிமுகவும், பாஜகவும்  கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன.  அந்தவகையில் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வரும் பாஜகவின்  பூத் கமிட்டி ஆய்வுக் கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. அதில் அக்கட்சியின் மாநில தலைவர் நையினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார்.   இதில் இதுவரை முடிக்கப்பட்ட பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.  

அப்படி, கட்சிப் பணிகளை விவரித்த நிர்வாகி , ‘பாஜகவிற்கு சாப்பாடு எல்லாம் கூட போடுறோம்;  ஆனால் ஓட்டு போட மாட்டோம்’ என மக்கள் கூறியதாக கூறினார். மக்கள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்திற்கு நடுவே நிர்வாகி இவ்வாறு கூறியதைக் கேட்டு நைனார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்தார். அத்துடன்  அங்கிருந்து பாஜக தொண்டர்களும் சிரிக்க தொடங்கினர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட  நயினார் நாகேந்திரன் அவர் கையை  பிடித்து, பேசுவதை  தடுத்து நிறுத்தினார். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம்  விருதுநகரில் மற்றொரு பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நயினார் நாகேந்திரன்,  2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.