×

"புதிய முதலீடுகள் ஈர்த்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிக்கு வரவேற்பு" - முத்தரசன்

 

திராவிட மாடல் அரசினை திறம்பட வழிநடத்தி வரும் தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இச்சாதனை தமிழ்நாட்டு வரலாற்றில் வைர எழுத்துக்களில் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கடந்த 07.01.2024 மற்றும் 08.01.2024 தேதிகளில் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ரூ.6 லட்சத்து 64 ஆயிரம்  கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மீது தனி கவனம் செலுத்தி அவைகளை நடைமுறைப்படுத்த சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பது நம்பிக்கையூட்டும் நடவடிக்கையாகும்.  

உலக முதலீட்டாளர் மாநாடு வெற்றிகரமாக அமைய முதலமைச்சர் நேரடியாக அவர்களை சந்தித்து உரையாடியதும், தொழில்துறை அமைச்சர், நிதியமைச்சர் உள்பட உயர் அதிகாரிகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பி இரு தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடத்தி, அவர்களது எதிர்பார்ப்புகளை அறிந்து கொண்டு, அழைத்ததும் வெற்றிக்கு அடிப்படையாகும்.  ஒவ்வொரு ஒப்பந்தமும் கால வரம்பு நிர்ணயித்து நிறைவேற்றுவதில் முனைப்பு காட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற முதலமைச்சரும், அரசும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு பாராட்டி, வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.