×

வெதர்மேன் முக்கிய அப்டேட் : சென்னை கனமழை பாதிப்பில் இருந்து தப்பித்ததா..?

 

வானிலை தொடர்பான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் இம்மாத இறுதி வரை காற்றதழுத்த தாழ்வு மையம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அப்படி ஒருவேளை உருவானாலும் அது சென்னையை நோக்கி வருவதற்கான வாய்ப்புகள் குறைவு, எனவே சென்னை கனமழை பாதிப்பில் இருந்து தப்பித்ததாக கூறிய அவர், சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, வடகிழக்கு பருவமழை காலத்தில் காற்றதழுத்த தாழ்வு பகுதியானது மழையை கொண்டு வரும். ஆனால் நாம் தற்போது வெப்பசலன மழையை நம்பி இருக்கிறோம். கடந்த இரண்டு நாட்களாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் பகலில் வெயிலும் மாலையில் இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. மழை மேகங்களின் அளவு குறைவாக இருப்பதால், சில இடங்களில் மழை பெய்யலாம், பெய்யாமலும் போகலாம் அல்லது ஒருமணி நேரம் வரை கனமழை கூட பெய்யலாம். இது காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஏற்படும் மழையை போல் பரவலாக இருக்காது. 

இன்று நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், காரைக்கால், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும் மழை இருக்கும். 

MJO (Madden-julian oscillation) இல்லாததால் பருவமழை குறித்து பாசிட்டிவாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அடுத்த மூன்று நாட்களுக்கு சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நேற்று போல இடியுடன் கூடிய மழையும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.