தேர்தல் முடிவை கண்ணியத்துடனும், துணிச்சலுடனும் தலைவர் ஸ்டாலின் வழியில் எதிர்கொள்வோம் - சபரீசன்..!!
May 19, 2026, 07:45 IST
PEN அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். தேர்தல் முடிவுகள் அரசியல், சமூகம், அமைப்புசார் மற்றும் மக்களின் மனநிலை உள்ளிட்ட பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
தற்போதைய சூழலில் எங்களின் கவனம் குற்றச்சாட்டு அல்லது ஊகங்களின் மீது அல்ல; மக்களின் கருத்துகளை கேட்டு, அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதில்தான் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'கட்சித் தொண்டர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து வரும் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மற்றும் பயனுள்ள ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. அதே நேரத்தில், தவறான தகவல்கள், தனிநபர் குறிவைப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும்' என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன் PEN அமைப்பின் நிறுவனர் சபரீசன் வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சமீபத்திய தேர்தல் முடிவுகளுக்கான முழுப் பொறுப்பையும் PEN அமைப்பின் மீது சுமத்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஜனநாயகத்தில் விமர்சனங்களும் பொது ஆய்வுகளும் இயல்பானவை. ஆனால் மிகப்பெரிய அரசியல் முடிவை ஒரே காரணத்திற்குள் சுருக்குவது யதார்த்தத்தை பிரதிபலிப்பதல்ல' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'PEN அமைப்பு தகவல் பரிமாற்றத்தை வலுப்படுத்தவும், மக்களுடன் டிஜிட்டல் வழியில் தொடர்பு கொள்ளவும், நவீன அரசியல் அணுகுமுறைகளை கொண்டுவர உருவாக்கப்பட்டது. எங்கள் குழுவின் ஒவ்வொரு முயற்சியும் அர்ப்பணிப்பு மற்றும் ஜனநாயக நம்பிக்கையின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களின் தீர்ப்பை கண்ணியத்துடனும் தைரியத்துடனும் ஏற்றுக்கொண்டார். தாம் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து, அவர் நன்றி தெரிவித்தது, ஜனநாயக பண்பை வெளிப்படுத்துகிறது. அவரது பாதையை பின்பற்றி PEN அமைப்பும் தனது குறைகளை புரிந்துகொண்டு புதிய நோக்கத்துடன் முன்னேறும்.
இறுதியாக, மக்களின் தீர்ப்பை எளிமையுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். தேர்தல் முடிவில் எனது பங்களிப்பால் ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால் அதற்கான பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். தொடர்ந்து மக்களின் எதிர்பார்ப்புகளை ஆழமாக புரிந்துகொண்டு செயல்படுவேன்' என்று சபரீசன் வேதமூர்த்தி தெரிவித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனை நிறுவனராக கொண்டு PEN நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் திமுகவின் அரசியல் உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.