நடிகர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு வந்தால் ஸ்டிரைக் வாபஸ் பற்றி பரிசீலனை- தயாரிப்பாளர் சங்கம்
நடிகர்களின் சம்பளத்திற்கு பதிலாக வியாபார பங்கிட்டு முறை குறித்து 2023 ஜூன் மாத முதல் பேசி வருகிறோம் என தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் பதில் அளித்துள்ளது.
வருமானப் பகிர்வு அடிப்படையில் படத்தயாரிப்பை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்கம் மே 2ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர்களின் வருவாய் தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கம் மீது ஆதாரமற்ற குற்றம் சுமத்தி வேலை நிறுத்தம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது பேரதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. தன்னிச்சையாக வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்திற்குரியது. தேர்தல் முடிவுக்கு பின் ஆலோசிக்கலாம் எனக் கூறியிருந்தது.
தயாரிப்பாளர் சங்கம் தங்களிடம் இது குறித்து விவாதிக்கவில்லை என நடிகர் சங்கம் கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சங்கம், நடிகர்களின் சம்பளத்திற்கு பதிலாக வியாபார பங்கிட்டு முறை குறித்து 2023 ஜூன் மாத முதல் பேசி வருகிறோம். தென்னிந்திய நடிகர் சங்கம் பேச்சு வார்த்தைக்கு வர உடன்பட்டால் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட ஒரு நாள் (மே2) அடையாள வேலை நிறுத்தத்தை மறுபரிசீலனை செய்வோம் எனக் கூறியுள்ளது.