×

சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் ஆலோசிக்கவில்லை - மேயர் பிரியா

 

சென்னையில் சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.


சென்னை அண்ணா நகரில் கடந்த ஆண்டு ரூபாய் 5,000 சொத்து வரி கட்டிய கட்டிட உரிமையாளருக்கு தற்போது ரூ.28,000 சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித காரணமும் இன்றி முறையான அறிவிப்பு இல்லாமல் சொத்து வரியை 4 மடங்கு உயர்த்தி இருப்பதாக சென்னை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 
சென்னையில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, “இது மக்களை அவதிக்குள்ளாக்கும் செயல். சொத்து வரியை மறுமதிப்பீடு செய்கிறோம் என்ற பெயரில் அதிகமான தொகையை மக்கள் தலையில் கட்டியிருக்கின்றனர். மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது மிக முக்கியமான வருவாய் ஆதாரம். அது சம்பந்தமாக முக்கிய முடிவை எடுக்க வேண்டுமெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும். மாமன்றத்தில் சொத்து வரி குறித்து கவுன்சிலர்கள் மத்தியில் விவாதித்து ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டும். ஆனால், இங்கே அதிகாரிகள் தன்னிட்சையாக முடிவெடுத்திருக்கிறார்கள். அதிகாரிகள் முடிவை எடுத்து அறிவித்துவிட்டுதான் மேயரான என்னிடமே தகவல் சொல்கின்றனர். இது மக்களை இன்னலுக்குள்ளாக்கும் செயலே. இதைக் கவனமாகக் கையாண்டிருக்க வேண்டும். இந்த மாத மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் இதைக் பெரிய பிரச்னையாக எழுப்புவார்கள். சென்னையில் சொத்து வரி உயர்வு குறித்து எங்களிடம் அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. சொத்து வரி உயர்வு அறிவிப்பு வெளியிட்டது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.” என்றார்.