×

வீ தி லீடர்ஸ் அமைப்பு நிறுவனர் அண்ணாமலை வேண்டுகோள்..!!

 

திருப்பூர், கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயாவில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில், அண்ணாமலை பேசியதாவது:

காமராஜர் தன் வாழ்நாளில், ஒன்பது ஆண்டு சிறையில் கழித்த அவர், ஒன்பது ஆண்டு தமிழக முதல்வராக இருந்தார். எந்த பள்ளியிலும் படிக்காதவர்.

ஆனால், ஒரு மேதை. 45 சதவீதமாக இருந்ததை, 80 ஆக கல்வி கற்கும் சதவீதத்தை உயர்த்தி காட்டியவர். காமராஜர் ஆட்சிக்கும், இப்போதைய ஆட்சிக்கும் இடையே பட்ஜெட் வித்தியாசம், 10 ஆயிரம் மடங்கு அதிகம். இன்றைய அமைச்சரவை யில், 36 பேர் வரை வைத்து கொள்ளலாம்.

அவரது ஆட்சி காலத்தில் மொத்தமே, எட்டு பேர் தான். பட்டியல் இனத்தை சேர்ந்தவரை அமைச்சரவையில் கொண்டு வந்தவர். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரையும் அமைச்சராக்கினார்.

இவரை முழுமை யாக புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை குடிக்க வைத்து அந்த பணத்தில் பட்ஜெட் போடக்கூடாது என சுத்தமான பட்ஜெட் தந்தார்.

ஆனால், சமீபத்தின் ஆய்வின்படி, 18 வயது முதல், 70 வயது வரை ஆண்களில், 24 சதவீதம் பேர் மதுஅருந்துகின்றனர். 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர்.

ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று சேரும்போது தான் நடக்கும். 18 - 70 வயதுக்குள், நான்கில் ஒருவர் மது அருந்துகிறார்.

அதிகரித்துள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வீ தி லீடர்ஸ் அமைப்பு இதனை இயக்கமாக எடுத்து ஒரு மாதம் பரப்புரை செய்யும். நாங்கள் சொல்வதை விட, மாணவர்களாகிய நீங்கள் சொன்னால் தான் கேட்பார்கள்.

எனவே, நீங்கள் பொது வெளியில் இதை மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.