"கவர்ச்சிகரமான திட்டங்களும், போட்டோஷூட்களும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது"- அண்ணாமலை
கிருஷ்ணகிரியில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் பெண்கள் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ‘We The Leaders' அமைப்பின் தலைவர் அண்ணாமலை, "நாம் விரிவடைந்து கொண்டிருக்கிறோம். சுருங்கக் கூடாது. கைதட்டுவதற்காகவோ, சமூக வலைதளங்களில் லைக் போடுவதற்காகவோ நாம் இல்லை. ஆட்சியைப் பிடிப்பதற்காக நாம் இருக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதை நோக்கி ஒவ்வொரு நகர்வாகவும் நாம் முன்னேறிச் செல்கிறோம். மக்கள் இயக்கமாக ‘We The Leaders' அமைப்பு இருக்கும். நாம் யாருக்கும் பயப்பட மாட்டோம். என் மனசாட்சி என்ன சொல்கிறதோ, அதை எப்போதும் பேசுபவன் நான். தமிழ்நாட்டில் இருக்கும் யாரும் எனக்கு தேசியத்தை பற்றி பாடம் எடுக்க வேண்டாம். பல மாநிலங்களில் பணியாற்றியிருக்கிறேன், பல மாநிலங்களில் வாழ்ந்திருக்கிறேன். இந்தியாவின் ஒற்றுமை என்ன, இறையாண்மை என்ன என்பது எனக்குத் தெரியும். இந்தப் பாடம் எங்களுக்கு வேண்டாம். எங்களுடைய கனவு வேறுமாதிரியான இந்தியா. மோடி அருமையான பிரதமர்.. அவர் நல்லது செய்யும் போது அவருக்கு துணை நிற்போம். யாராவது வெளிநாடுகளில் இருந்து பணம் கொடுக்குறானா..? போராட்டம் செய்கிறானா..? அவனை தூக்கி உள்ளே வைங்க.. எல்லா விதமான போலீஸும் உங்க கைகளில் இருக்கு.. சமூக வலைதளங்களில் கம்பு சுத்தாதீங்க..? அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கு
எல்லா மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கனவு. குஜராத்தும் வளர வேண்டும், தமிழ்நாடும் வளர வேண்டும். இதில் தவறில்லை. கவர்ச்சிகரமான திட்டங்கள் மக்களுக்கு எந்த பயனும் கொடுக்காது. போட்டோஷூட்களும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. கட்டிமுடிக்கப்பட்ட ஒரு நூலகத்தை திறந்து வைப்பதற்கோ, மேட்டூர் அணையை திறப்பதற்கோ பல கோடி ரூபாய் செலவு செய்வதால் எதுவும் நடக்காது. தமிழ்நாட்டிற்கு தேவை அதெல்லாம் இல்லை, மக்கள் தேவையை எந்த அரசு செய்கிறதோ அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம். தி.மு.க ஆட்சியில் தமிழ்நாடு 10 சதவீத வளர்ச்சி அடைந்தது என்றார்கள்? உலகத்தில் இருக்கும் 6 செல்போனில் ஒரு போன் ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கும் செல்போன். ஆனால் உள்ளூர் பொருளாதரத்தின் நிலை என்ன..? உங்க வீட்டுக்கு வளர்ச்சி வந்ததா..? எனக்கும் விஜய்க்கும் எந்த தொடர்ப்பும் கிடையாது.. அவரை நான் பார்த்தது கூட கிடையாது..! ஆனாலும் தேர்தலுக்கு முன்பு அவருக்கு தி.மு.க பிரச்சனை கொடுத்த போது அதை எதிர்த்து கேள்வி கேட்டது நான் மட்டும் தான்.. ஏன் தெரியுமா..? நியாயமாக சில விஷயத்தை செய்வேன். CJP-க்கு வீ த லீடர்சின் ஆதரவு எப்போதும் கிடையாது.. CJP மீதான கைது நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும். SIR பணிகள் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியினர் தூங்கிக் கொண்டிருந்தார்களா? இன்று காங்கிரஸ் எதற்கு டிராமா செய்து கொண்டிருக்கிறது..?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.