×

நாங்க இருக்குறதே வாடகை வீட்ல தான்; அப்புறம் எப்படி 2 கோடியில் சொத்து வாங்க முடியும்? - அமைச்சர் ரமேஷ்..!

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்ற போது கிழக்கு கோபுரத்தில் ஷூ அணிந்தபடி அவர் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது.

இந்நிலையில் அமைச்சர் ரமேஷிடம் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், "ஸ்ரீரங்கம் கோயிலில் கிழக்கு கோபுரப் பணிகள் நடைபெற்று வருவதால் அப்பகுதி முழுவதும் கற்களும், ஆணிகளும், இரும்புகளும் சிதறி கிடக்கின்றன. அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களே தங்கள் பாதுகாப்புக்காகக் காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள்.

நான் சென்றபோது அங்கிருந்த நன்கொடையாளர் நீங்கள் ஷூவைக் கழற்ற வேண்டாம், அப்படியே வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். ஷூ அணிந்து சென்றதை விமர்சிப்பவர்களுக்கு பகுத்தறிவு என்று ஒன்று இருக்க வேண்டும்.

பகுத்தறிவு இருப்பவர்கள் இப்படியெல்லாம் கேள்வி கேட்க மாட்டார்கள். இந்த மாதிரி விஷயங்களை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு பகுத்தறிவே இருக்காது" என்று காட்டமாக பதில் அளித்திருக்கிறார்.

.

தொடர்ந்து பழனி கோயில் நில மோசடி வழக்கில் உங்கள் மீது குற்றம் சுமத்துகிறார்களே என்ற கேள்விக்கு, "என் குடும்பத்தில் உள்ள யாரிடமும் 2 கோடி ரூபாய் அளவுக்கு பணமே கிடையாது. நாங்கள் வசிப்பதே வாடகை வீட்டில்தான்; அப்படியே நாங்கள் சொத்து வாங்க நினைத்தாலும், சென்னையில் வாங்காமல் பழனியில் போய் ஏன் வாங்கப் போகிறோம்?" எனக் கூறி குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.ஏதாவது ஒரு காரணத்தை வைத்து என் பெயரையும், புகழையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.