“ஒரு வருடம் நேரம் கொடுங்க! தவறாக ஆட்சி செய்தால் ஆட்சியே கவிழும்”- அண்ணாமலை
நமது அமைப்பை அரசியலாக மாற்றி மக்களுக்கான அரசியலாக செயல்படப்போகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, “மக்களுக்கு பிடிக்குதோ இல்லையோ இப்போதான் பல ஆண்டுகள் கழித்து ஒரு புரட்சி நடந்துள்ளது.. அவர்களுக்கு ஒரு ஆண்டு டைம் கொடுப்போம்.. ஒழுங்கா ஆட்சி செய்யலனா கவிழ்ப்போம்.. தவறுகள் செய்யும் போது நாம் சுட்டிக்காட்டுவோம்.. அந்த தவறை திருத்திக்கொள்ளும் போது பாராட்டுவோம். தவெக அரசு சேமித்த 15,000 கோடியை நீர் மேலாண்மை , கல்வி , கிராமப்புற வளர்ச்சி என மூன்றிலும் தலா 5,000 கோடி ஒதுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை . எதிர்க்கட்சியை சார்ந்த நிறைய நண்பர்கள் என்னை பார்த்து சொல்கிறார்கள். அரசியலை பண்ணவில்லை என்று இன்றைக்கு எதிர்க்கட்சி பண்ணக்கூடிய அரசியல் என்னவென்றால், எப்படியாவது ஆளுங்கட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் அரசியலாக இருக்கிறது.
ஆப்ரேஷன் மேகாலயா என்ற ஒரு பெயரை வைத்துக்கொண்டு பிள்ளை பிடிப்பது போல் 10 எம்எல்ஏக்களை பிடித்து வைத்து அவர்கள் மீது சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து ஆட்சியை கவிழுங்கள் என்று எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கிறார்கள். தவறாக ஆட்சி செய்தால் ஆட்சியே கவிழும். ஒரு வருடம் இந்த அரசுக்கு நேரம் கொடுங்கள் எதற்கு காலில் வெந்நீரை ஊற்றியது போல சுற்றிக்கொண்டே வருகிறீர்கள் அவர்கள் வேலை செய்யட்டும். அடிப்படை அரசியலையே மாற்றுவதற்காக வந்துள்ளோம். சேவை மனப்பான்மையோடு வருபவர்களால் மட்டும்தான் அடிப்படை அரசியலை மாற்ற முடியும் ” என்றார்.