"அமித்ஷா என்னை டெல்லியில் பொறுப்பு எடுக்க சொன்னார்! நான் முடியாதுனு சொல்லிட்டேன்”- அண்ணாமலை
இதுவரை 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர் . 16 நாளில் 100 டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளோம் என WE THE LEADERS அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அண்ணாமலை கூறினார்.
சென்னை எழும்பூரில் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி WE THE LEADERS நிறுவனர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அண்ணாமலை, “ஆரம்பிக்கப்பட்ட 73 நாட்களில் 20 லட்சம் பேர் வீ தி லீடர்ஸ் அமைப்பில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 50 லட்சம் பேர் இணைந்தவுடன் இதை அரசியல் இயக்கமாக மாற்ற போகிறோம். அமித்ஷா என்னை டெல்லியில் பொறுப்பு எடுக்க சொன்னார். எனக்கு ஒத்துவராது, தமிழ்நாட்டிலேயே இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுவரை 20 லட்சம் பேர் இணைந்துள்ளனர் . 16 நாளில் 100 டன்னுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகளை எடுத்துள்ளோம் . தமிழகத்தில் 50,197 நீர் நிலைகள் தற்போது பயன்பாட்டில் இல்லை. த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்கும் சதி அரசியலை எதிர்க்கட்சிகள் செய்கிறது. த.வெ.க அரசு ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் தான் ஆகிறது. என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.கல்வி நிலையங்கள், கோயில் அருகே இருந்த டாஸ்மாக் கடைகளை த.வெ.க அரசு மூடியது பாராட்டத்தக்கது. நாம் மாசற்ற சூழலில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.
தவெக ஆட்சி வந்து 100 நாள் கூட ஆகவில்லை... சில விஷயங்கள் சரியாக செய்கிறார்கள். சில விஷயங்கள் தவறாக செய்கிறார்கள். தவறாக செய்யக்கூடிய விஷயங்களை சுட்டிக் காட்டி கொண்டுதான் இருக்கிறோம். எதிர்க்கட்சியாக இருந்தால் ஆளுங்கட்சி சரியில்லை என்றும், ஆளுங்கட்சியாக இருந்தால் எதிர்க்கட்சி சரியில்லை என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்த அரசியலை பேசுவதற்கு ஏன் அண்ணாமலை எதற்கு சட்டசபைக்குள் போக வேண்டும். நாம் அரசியலை செய்வோம், அடிப்படை மாற்றத்திற்கான அரசியலை செய்வோம். தமிழகத்தில் இப்போது தான் இத்தனை ஆண்டு காலம் கழித்து மக்களுக்குப் பிடிக்குதோ பிடிக்கலையோ ஒரு புரட்சி நடந்திருக்கிறது. ஒரு முதலமைச்சர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். இந்த ஆட்சிக்கு ஒரு ஆண்டு காலம் கொடுங்கள் என்று நான் பல இடங்களில் சொல்லி வருகிறேன். 108 சட்டமன்ற உறுப்பினர் வந்ததில் 101 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்முறையாக சட்டமன்றத்தை எட்டிப் பார்க்கிறார்கள்” என்றார்.