×

திமுகவை வீட்டுக்கு அனுப்பவே கூட்டணி சேர்ந்துள்ளோம் - அன்புமணி..!

 

பாமக (அன்புமணி ஆதரவு) சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி ராமதாஸ் இன்று நேர்காணலில் ஈடுபட்டார். அதன் பிறகு, அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு இன்றிலிருந்து நேர்காணல் எங்கள் அலுவலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று காலை தொடங்கி அடுத்த நான்கு நாட்கள் நடைபெறும். இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என மீண்டும் ஒரு பொய் சொல்லி உள்ளார். இந்தியாவிலேயே அதிக குற்றங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது.

உதாரணம், அண்ணா பல்கலைக்கழகம். அந்த சம்பவம் மட்டுமல்ல. கடந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பெண், ராமேஸ்வரத்தில் ஒரு இளம்பெண், கோயம்புத்தூர் விமான நிலையம் அருகே ஒரு பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், கும்மிடிப்பூண்டி அருகில் ஆரப்பாக்கம் கிராமத்திலே 8 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை, ராணிப்பேட்டை மாவட்டத்தில்.. இப்படி ஒவ்வொரு பகுதியிலும் பாலியல் வன்கொடுமைகள். இதற்கு காரணம் தமிழ்நாடு கஞ்சா நாடாக மாறியிருக்கிறது.

இந்தியாவிலேயே பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிகமாக போதைப் பொருட்கள் பயன்படுத்தும் நிலை இருந்தது. இப்போது தமிழ்நாடு அதை முந்திக் கொண்டிருக்கிறது. நான் சொன்னது போன்று தமிழ்நாட்டில் உள்ள 12600 ஊராட்சிகளில் 43,000 கிராமங்கள் இருக்கிறது. இன்றைக்கு 43,000 கிராமத்திலும் போதை பொருட்கள் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறது இந்த தலைமுறை.

நகரத்தில் சொல்லவே தேவையில்லை. இந்த தலைமுறை தெரு தெருவாக, வீதி வீதியாக பள்ளிக்கூடங்கள், கல்லூரி வாசல்களில் கஞ்சா, கொகைன் உள்ளிட்ட என்னென்ன உலகத்தில் போதை பொருள் இருக்கிறதோ? அனைத்தும் தமிழ்நாட்டில் விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது திமுகவிற்கு நன்றாக தெரியும். முதலமைச்சருக்கும் தெரியும். நடவடிக்கையும் இல்லை. நாங்கள் மனப்பூர்வமாக கூட்டணி சேர்ந்துவிட்டோம். நாங்கள் கூட்டணி சேர்ந்த முக்கிய நோக்கம். இந்த மோசமான ஊழல் செய்கின்ற மக்கள் விரோத கஞ்சா விற்கின்ற திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அந்த ஒற்றைக் கருத்தோடு தான் கூட்டணி சேர்ந்துள்ளோம்.

கூட்டணிக் கட்சியினருக்குள் அன்றாடம் பேசிக்கொண்டிருக்கிறோம். அனைவரும் உற்சாகத்துடன் இருக்கிறார்கள். நாங்கள் கூட்டணியை முடிவு செய்துவிட்டோம். திமுகவில் யாரும் களத்தில் இல்லை. நாங்கள் கூட்டணி சேர்ந்தவுடன் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.