"மீண்டும் ஒரு எம்.ஜி.ஆர் கிடைத்துவிட்டார்" - சட்டப்பேரவையில் சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் புகழாரம்.
முதலமைச்சர் விஜய் வாழ்த்துரை வழங்கிய பின்னர், சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் நன்றி தெரிவித்து பேசினார்.
அப்போது அவர், "ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற செய்த முதல்வருக்கும், தொகுதி மக்களுக்கும் நன்றி.
எம்ஜிஆர் காலத்தில் முதன்முறையாக வெற்றி பெற்று சட்டப் பேரவையில் வந்த போது முதல் நாள் பள்ளிக்கு வருவது போல் வந்தேன். என்னை ஆளாக்கி வளர்த்தவர் எம்ஜிஆர். உங்களை அனைவரும் நல்ல முறையில் சொல்கிறார்களே எப்படி என கேட்டார். அவரிடம் உங்கள் பெயர் கெட்டு விடக் கூடாது என பணியாற்றியதாக கூறினேன். எனக்கு மகள் இருந்திருந்தால் பிரபாகருக்கே கொடுத்திருப்பேன் என எம்ஜிஆர் கூறினார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா வழி வந்தவன் நான். கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழக வெற்றிக் கழகம் வளர்ச்சி அடைந்தது. சாதி, மதமற்ற சமூகத்தை உருவாக்க இவர் தான் வருவார் என மக்கள் நினைத்தார்.
மீண்டும் ஒரு எம்ஜிஆர் கிடைக்க மாட்டாரா என என் மனம் ஏங்கியது. அப்படி வந்தவர் தான் நமது முதல்வர் விஜய். முதல்வர் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார் என அவையில் நீங்கள் பாராட்டினீர்கள்.
எளிதில் வெல்ல முடியாத தொகுதியான ஆயிரம் விளக்கு தொகுதியில் விஜய் அவர்களுக்காகவே மக்கள் வாக்களித்தார்கள். வாழும் எம்ஜிஆர் முதல்வர் விஜய். இது விஜய் அலை, விசில் அலை, வெற்றி அலை. வலுக்கட்டாயமாக கூட்டம் சேர்த்த நேரத்தில் தலைவர் விஜய்யை காண கூட்டம் அலைமோதியது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கூறியும் பிற கட்சிகள் வராத நிலையில் மக்களுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றுள்ளார். இந்திய துணை கண்டத்திற்கு வழி காட்டும் நாள் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் ஒரு அமைதி புரட்சி நிகழ்ந்துள்ளது.
இன்று முதல்வர் பெரிய கவுரத்தை எனக்கு வழங்கியுள்ளார்கள். கண்ணீர் வருகிறது. முதல்வருக்கும் அனைத்து கட்சியினருக்கும் நன்றி. எந்த கட்சிக்கும் சார்பில்லாமல் செயல்படுவேன். அனைவருக்கும் பேச உரிய நேரம் வழங்கப்படும். இந்த அவையில் தனிப்பட்ட விமர்சனங்கள் தவிர்ப்போம்.
முன்மாதிரி சபாநாயகராக இருப்பதே என் விருப்பம். தமிழ் மொழிக்கு தான் முதலிடம் என்பதில் உறுதியாக உள்ளோம். புதிய துவக்கத்தை உறுதியாக உள்ளோம். நிறைய சூழ்ச்சியை துடைத்தெறிந்து முதல்வர் விஜய் இந்த அவையில் அமர்ந்திருக்கிறார். ஜனநாயகப் போரை ஒரே ஆளாக சந்தித்த தளபதி நீங்கள். மக்களோடு மக்களாக செயல்பட்டார்.
போட்டியிட்ட முதல் தேர்தலிலே வெற்றி பெற்றவர் எம்ஜிஆர். அதே போல் முதல் தேர்தலியே நமது முதல்வர் வெற்றி பெற்றுள்ளார். நடுநிலமை என்றால் சமத்துவம். அது காக்கப்படும். இந்த அவையின் மரபு மற்றும் மாண்பு காக்கப்படும்" என்றார்.