×

 ‘நாம் தமிழ்நாட்டில் இருப்பதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை’ - நடிகர் கார்த்தி.. 

 

 நாம் தமிழ்நாட்டில் உள்ளதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை, சக மனிதனை மதிக்கக் கற்றுக்கொடுப்பதுதான் கல்வி என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.  
 
ஸ்ரீ சிவக்குமார் கல்வி அறகட்டளை 45-வது ஆண்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில்  நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளை சார்பாக,  மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி உள்பட  12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் தலைமுறையாகக் கல்லூரி செல்லும் விளிம்பு நிலை குடும்பங்களைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு தலா ரூ. 10,000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.   இதில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் பேராசிரியர் கல்விமணி ஆகியோர் கலந்துகொண்டு  மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய மணிப்பூர் மாணவி, “எங்கள் ஊரில் பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. அதனால் எங்கள் ஊரில் உள்ள நிறைய சிறுவர்கள் பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்ல முடியாமல் இருக்கிறார்கள். நல்வாய்ப்பாக நான் இங்கு வந்ததால் படித்துக் கொண்டிருக்கிறேன். எங்கள் ஊருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கூறியிருந்தார். 

 பின்னர் மணிப்பூர் மாணவியின் பேச்சைக் குறிப்பிட்டு பேசிய நடிகர் கார்த்தி, “பெரிய அளவில் காசுக்கு ஆசைப்படாதவராக அப்பா இருந்துள்ளார்.  அப்பா தொடங்கியதை 25 ஆண்டுகளுக்குப் பிறகு அகரம் கையில் எடுத்தது. முன்பு முதல் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு விருது வழங்கினோம். பிறகு அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து முதல் மதிப்பெண் எடுத்தார்கள் என்பதையும் முக்கியமாகப் பார்க்கிறோம். 

மாணவர்களை நகரத்தில் வந்து படிக்க வைப்பதை நோக்கமாக வைத்திருக்கிறது அகரம். சிறிய கிராமத்தில் படிப்பவர்களுக்கு பெரிய அளவில் அறிமுகம் இருக்காது. என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தால், உங்களை எதாலும் நிறுத்த முடியாது. சாதாரண மாணவனாக இருப்பது கடினமானது. அவனை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். அது ரொம்ப கொடுமை. கல்வி பெரிய ஆயுதமாக உள்ளது. கல்வி குறித்தான தகவல்களை பெரிய அளவில் கொண்டு செல்ல வேண்டும். அதை யூடியூப் உள்ளிட்ட தளங்களைபயன்படுத்தி பாப்புலர் ஆக்க வேண்டும். மணிப்பூர் மாணவி சொன்னதை நம்மால் உணர முடியுமா?. நாம் தமிழ்நாட்டில் உள்ளதால் மணிப்பூரின் நிலை தெரியவில்லை. படிப்பதற்கு உதவி என்று கேட்டால், தமிழ்நாட்டில் யாரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள். சக மனிதனை மதிக்க கற்றுக் கொடுப்பதுதான் கல்வி” என்று கூறினார்.