×

படித்திருந்தும் முட்டாள்களாக இருக்கிறோம்! – பிளாஸ்டிக் டீ பயன்பாடு குறித்து அமைச்சர் அருண்ராஜ் சொன்ன பரபரப்பு உண்மை!

 

இந்தியர்களின் ஆயுட்காலம் நீட்டிப்பு குறித்து டாக்டர் நவீன் ஞானசேகரன் எழுதிய 'தி 100 இயர் ப்ளூ பிரின்ட்' (The 100 year Blue Print) எனும் புத்தகத்தை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நமது முன்னோர்கள் உடலை எந்த அளவுக்கு பாதுகாத்தார்களோ, அந்த அளவுக்கு நாம் இப்போது பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.

'உணவே மருந்து' என்ற வாழ்க்கை முறையே சிறந்தது. எனவே, சத்தான உணவுகளையும், புரதச்சத்து மிக்க உணவுகளையும் நாம் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலை நாடுகளில் எந்த நேரத்தில் வேலையை முடித்து வந்தாலும் அவர்கள் உடற்பயிற்சியில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், நம்முடைய நாட்டில் அவ்வாறு இல்லை. உடற்பயிற்சிதான் நோயற்ற வாழ்க்கையை கொடுக்கும் என்ற உண்மையை நாம் உணர வேண்டும்.

எது சிறந்த உணவு என்பது கூட தெரியாத அளவுக்கு நம்முடைய வாழ்வியல் மாறி இருக்கிறது. குறிப்பாக, பிளாஸ்டிக் கவரில் சூடாக டீ வாங்கி வருகிறார்கள். இதனால் பிளாஸ்டிக்கில் உள்ள மோசமான ரசாயனங்கள் நம் உடலில் கலக்கின்றன. அது புற்றுநோயை கூட ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

இது போன்ற விஷயங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். முன்பெல்லாம் அறிவார்ந்த சமூகமாக நாம் இருந்தோம். தற்போது, படித்திருந்தும் முட்டாள்களாக இருக்கிறோம்.

வீடுகளுக்கு வருபவர்கள் பழங்களை தவிர்த்து, சர்க்கரையை அதிகம் கொட்டி தயாரிக்கப்படும் ஸ்வீட்களை வாங்கி வருகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை நாம் தவிர்க்க வேண்டும்" என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இம்மாத இறுதியில் தமிழக பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில், ஆரோக்கியத்தை வளர்க்கக்கூடிய திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

மருத்துவத்துறைக்கு பல புதிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன. ஓமந்தூரார் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனை பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அரசியல் காரணத்திற்காக நிறுத்த மாட்டோம். அதனை எவ்வாறு மேம்படுத்தி செயல்படுத்துவது என்பதில்தான் அரசு கவனம் செலுத்துகிறது.

செயற்கையான முறையில் செறிவூட்டப்பட்ட வண்ண அப்பளங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. அதனால் அதனை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராசிட்டமால் மருந்தில் மிகக்குறைந்த அளவே ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இதுதொடர்பான விளக்கத்தையும் சுகாதாரத்துறை அளித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில், மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்" என அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.