×

நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம்.. 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்றுள்ளது - பிரதமர் மோடி..!
 

 

இன்று நாம் அனைவரும் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம்டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற விழாவில் 13-வது முறையாக பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றினார். 

தொடர்ந்து நாட்டின் 80வது சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றி வரும் பிரதமர் மோடி, “இன்று, ஒவ்வொரு இதயமும் 'வந்தே மாதரம்' எனும் தாளத்திற்கு ஏற்பத் துடிக்கிறது. இன்று, ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது. ஒவ்வொருவருக்குள்ளும் மூவர்ணக் கொடி உள்ளது. இந்தச் சுதந்திர தினத்தன்று, அனைத்துச் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் எனது அஞ்சலியை செலுத்துகிறேன். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள். சுதந்திரத்திற்குப் பிறகு, செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து 'வந்தே மாதரம்' முழக்கம் எதிரொலித்த தருணம். இன்று இந்த விழாவில் கலந்துகொண்டுள்ள அனைவருக்கும் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற பெரும் கனவை இந்தியா கொண்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா, வளர்ந்த நாடாக மாறுவதற்கான உறுதியை மேற்கொள்ளும்போது, ​​அது நமது துணிச்சலின் அடையாளமாக வெளிப்படுகிறது.

சமீபத்தில், நாட்டின் சில பகுதிகள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களின் துயரத்தில் நாங்கள் ஆழ்ந்த அனுதாபம் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் - நாங்களும் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம்”எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமத் தொழில் உற்பத்தி ஐந்து மடங்காகவும், மின்னணு சாதன உற்பத்தி ஏழு மடங்காகவும் அதிகரித்துள்ளன. அலைபேசி உற்பத்தி 33 சதவீதமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 100 சதவீதமும் அதிகரித்துள்ளன.

ஒரு நாடு தனது கனவுகள், உறுதிப்பாடு மற்றும் உள்ளார்ந்த வலிமை ஆகியவற்றால் உந்தப்பட்டு முன்னேறும்போதுதான் அது மகத்தானதாகித் தனது இலக்குகளை அடைகிறது. சிறிய கனவுகள் இனிப் போதுமானதாக இருக்காது. நாம் பெரிய கனவுகளைக் காண வேண்டும்.

ஏனெனில், பெரிய கனவுகள் நமது சிந்தனையை விரிவுபடுத்துவதோடு, நமது தொலைநோக்குப் பார்வையின் எல்லைகளையும் அகலமாக்குகின்றன. நமது உறுதிப்பாடு அசைக்க முடியாததாக இருக்க வேண்டும். அத்தகைய உறுதியான மனநிலை இருக்கும்போது, ​​இடர்பாடுகள் மற்றும் பேரிடர்களுக்கு மத்தியிலும் கூட முன்னேற்றத்திற்கான பாதையை வகுக்கும் ஆற்றல் இயல்பாகவே உருவாகிறது.

2047-ஆம் ஆண்டில் நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றியிருக்க வேண்டும் என்பதே நமது தொலைநோக்குப் பார்வையாகும். 140 கோடி குடிமக்களின் கூட்டு முயற்சியாலும், கடின உழைப்பு மனப்பான்மையாலும் நாம் இந்த இலக்கை அடைய வேண்டும்.

கடந்த 12 ஆண்டுகளில் பலத்தரப்பட்ட மக்கள், நாட்டைப் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல அசைக்க முடியாத உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் பாடுபட்டுள்ளனர். இத்தகைய முயற்சிகளை நான் மரியாதையுடன் அங்கீகரிக்கிறேன்.

நாம் சுயசார்பு கொண்டவர்களாக மாறி, நமது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இன்று, ஒவ்வொரு இந்தியரும் 'மேக் இன் இந்தியா', 'சுதேசி' மற்றும் 'வோக்கல் ஃபார் லோக்கல்' (Vocal for Local) போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து வருகின்றனர்.
 
”ஆற்றல் பாதுகாப்பு என்பது காலத்தின் தேவையாகும். 2047-ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தித் திறனை எட்டும் இலக்குடன் நாம் முன்னேறி வருகிறோம். இந்த தசாப்தத்தில் ஐந்து புதிய அணுமின் உலைகளைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர இலக்கு வைத்துள்ளோம்.

நாடு சுதந்திரம் அடைந்தது, அந்தச் சுதந்திரம் பல கனவுகளுடன் கூடியதாக இருந்தது. இருப்பினும், நம்மால் வேகமெடுக்கவோ அல்லது முன்னேற்றத்திற்கான உத்வேகத்தைப் பெறவோ முடியவில்லை. 'நடப்பது நடக்கட்டும்', 'இப்படியே போகட்டும்', 'எப்படியாவது நடந்துவிடும்', 'அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்ற மனப்பான்மையிலேயே நாம் தேங்கி நின்றோம். 2014-ஆம் ஆண்டிற்குள், உலகம் நம்மை "பலவீனமான ஐந்து நாடுகள்" (Fragile Five) என்ற வரிசையில் வைத்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளியது.

இத்தகைய சூழலுக்கு மத்தியிலும், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா புதியதொரு உத்வேகத்தைப் பெற்றுள்ளது. நாம் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். கடந்த 12 ஆண்டுகளில், பாதுகாப்புத் துறை உற்பத்தி கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், கதர் மற்றும் கிராமப்புறத் தொழில்களின் உற்பத்தி ஏறக்குறைய ஐந்து மடங்காகவும் அதிகரித்துள்ளது.

மின்னணு சாதனங்களின் உற்பத்தி கிட்டத்தட்ட ஏழு மடங்கு விரிவடைந்துள்ளது. நவீன ரயில் பெட்டிகளின் உற்பத்தி 21 மடங்கும், அலைபேசி உற்பத்தி 33 மடங்கும் அதிகரித்துள்ளன. அதையும் தாண்டி, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் நாம் முத்திரை பதித்துள்ளோம்.

இணையப் பயனாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட நான்கு மடங்காகவும், காப்புரிமை அங்கீகாரங்கள் நான்கு மடங்காகவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நூறு மடங்காகவும் உயர்ந்துள்ளன. சாமானிய குடிமக்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் நாம் அதே தீவிரத்துடன் பணியாற்றியுள்ளோம். முன்பை விட சராசரியாக ஆண்டுக்கு 15 மடங்கு வேகத்தில் குழாய் வழி குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளோம்.

முந்தைய ஆண்டு வேகத்தை விட ஆறு மடங்கு வேகத்தில் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஏழைகளுக்கு நான்கு மடங்கு வேகத்தில் கழிப்பறைகளை அமைத்துள்ளோம். அதேபோல், பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு மூன்று மடங்கு வேகத்தில் வீடுகளை வழங்கியுள்ளோம். நிர்வாகத்திலும் நாடு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

ஆயிரக்கணக்கான விதிமுறை நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் காலாவதியான நூற்றுக்கணக்கான சட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த நூற்றாண்டின் சட்டங்களைச் சார்ந்திருப்பதன் மூலம் 21-ம் நூற்றாண்டில் முன்னேறிச் செல்ல முடியாது. நவீன உள்கட்டமைப்பை உருவாக்க மெட்ரோ ரயில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தினோம் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்தினோம். இவை அனைத்தும் கடந்த பத்தாண்டுகளுக்குள் நிகழ்ந்துள்ளன.