×

"சைலண்ட்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டதா?" - மின்வெட்டுக்கு எதிராக பொங்கி எழுந்த பிரேமலதா விஜயகாந்த்!

 

முந்தைய மாதங்களை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டண ரசீது வந்துள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். சைலண்ட்டாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டு விட்டதா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. 

இகுறித்து பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில்முனைவோர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை மக்களின் அன்றாட வாழ்க்கையையும், விவசாய உற்பத்தியையும், தொழில் மற்றும் வணிக நடவடிக்கைகளையும் பெரிதும் பாதிக்கிறது. 

எனவே, மின்சாரத் துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இந்தப் பிரச்சனைக்கு மிக முக்கியத்துவம் அளித்து, உடனடியாக தீர்வு காண வேண்டும். தமிழகம் முழுவதும் ஏற்பட்டு வரும் மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் சுமையைக் குறைக்கும் வகையில், மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விவசாயத்துக்கான தடையற்ற மற்றும் தேவைப்படும் இடங்களில் இலவசமான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

மின் கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் நிலை இருப்பதால், சாமானிய மக்களின் வாழ்க்கை மேலும் சிரமத்துக்கு உள்ளாகும். மின் தடையை முற்றிலும் அகற்றி மின்சார கட்டண உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என தேமுதிக சார்பாக வலியுறுத்துகிறோம். மின்சார உற்பத்தி செய்ய, வருகின்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதற்கான அறிவிப்பை இந்த அரசு வழங்கி தமிழகத்தை மீண்டும் மின் மிகை மாநிலமாக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.