எச்சரிக்கை பதிவு..! ஆன்லைன் செயலியால் கொலைகாரனாக மாறிய இளைஞர்..!
வாணியம்பாடி அருகே உள்ள பெத்தகல்லுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பவுனம்மாள் (65). கணவர் மறைந்த நிலையில், பிள்ளைகளும் வெளியூரில் வசித்து வந்ததால் இவர் தனியாக வசித்து வந்தார். கடந்த 6-ஆம் தேதி, ஏரிக்கரையோரம் உள்ள தனது மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற பவுனம்மாள், அங்கு மர்மமான முறையில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்டு, தலையில் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி தலைமையிலான அம்பலூர் காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். மூதாட்டி அணிந்திருந்த 4 சவரன் தங்க நகைகள் மாயமாகி இருந்ததால், இது நகைக்காக நடந்த கொலை என்பதைப் போலீஸார் உறுதி செய்தனர். உடல் பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்ற இளைஞர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. முருகன் தனது செல்போனில் பல்வேறு ஆன்லைன் கடன் செயலிகள் (Online Loan Apps) மூலம் பல்லாயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்கு ஆளானதால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று மாட்டுக்கொட்டகையில் மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டமிட்ட முருகன், அவரைத் தாக்கித் துணியால் கட்டிப்போட்டுள்ளார். பின்னர் கழுத்தை நெறித்தும், தலையில் கல்லால் அடித்தும் மூதாட்டியைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்துவிட்டு, அவரிடமிருந்த 4 சவரன் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்பியோடியதை ஒப்புக்கொண்டார்.
ஆன்லைன் கடன் சுமையால் ஒரு இளைஞர் மூதாட்டியைத் திட்டமிட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, முருகன் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். முதியவர்கள் தனியாக இருக்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.