×

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான வழக்கு : உயர்நீதிமன்றம் விரைவில் விசாரணை..!

 

வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கட் சிவகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வது மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளது,  ஒரே முகவரியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இடம்பெற்ற்றிருப்பது  என மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.  

இந்த குற்றச்சாட்டிற்கு இந்திய தேர்தல் ஆணையம் உரிய விளக்கம் அளிக்காமல் ராகுல் காந்தியை மட்டும் மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புவது ஜனநாயக அமைப்புகளை பலவீனப்படுத்தும் செயல். ஆகையால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும், அந்த அடிப்படையில் அனைத்து தொகுதிகளுக்குமான வாக்காளர் பட்டியல் தரவுகளை பொதுமக்கள் பார்வைக்கு இணையதளத்தில் பிடிஎஃப் வடிவில் வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் வாக்காளர் பட்டியல் மோசடி புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விசாரணைகள் குறித்து முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த பொதுநல வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.