×

இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பெரும்பான்மையை நிரூபிக்க முதலமைச்சர் விஜய் தீவிரம்..!

 

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆட்சி அமைக்க  குறைந்தபட்சம் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தனிப்பெரும் கட்சி அல்லது கூட்டணிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்து, ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார்.

முதலமைச்சர் அல்லது ஆளுநரால் நியமிக்கப்பட்டவர், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை நிரூபிக்க "நம்பிக்கை தீர்மானத்தை" (Motion of Confidence) சபையில் கொண்டு வருவார். சபாநாயகர் குரல் வாக்கெடுப்பு (Voice Vote) மூலமாகவோ, அல்லது உறுப்பினர்களின் எண்ணிக்கையை எண்ணுவதன் மூலமாகவோ (Division of Votes) வாக்கெடுப்பு நடத்தலாம்.பெரும்பான்மை இல்லையெனில், ஒரு கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால், அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 174-ன் படி, ஆளுநர் ஆட்சியைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரைக்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான மிக முக்கியமான நம்பிக்கை கோரும் தீர்மானம் இன்று (மே 13, புதன்கிழமை) நடைபெற உள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம் வெளியிட்டுள்ள நிகழ்ச்சி நிரலில், இன்று காலை 9.30 மணி அளவில் ச. ஜோசப் விஜய் அவர்களை முதலமைச்சராகக் கொண்ட அமைச்சரவை மீது இப்பேரவை தனது நம்பிக்கையைத் தெரிவிக்கிறது" என்ற தீர்மானத்தை முதலமைச்சர் விஜய் முன்மொழிவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ஆளுநரின் அறிவுறுத்தலின்படி, மே 13-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளதால், இன்று சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. சபாநாயகர் ஆளுங்கட்சிக்கு ஆதரவு கோர வாய்ப்பளித்த பிறகு, வாக்கெடுப்பிற்காக அவையின் அனைத்து கதவுகளும் மூடப்படும். வாக்கெடுப்பின் போது அவையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுவர்; இதற்காக அவை ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 'குரல் வாக்கெடுப்பு' நடத்தப்படும். வாக்கெடுப்பில் பங்கேற்ற மொத்த உறுப்பினர்களில் 50% அதிகமானோர் (230 பேரில் 116 பேர்) ஆதரவு அளித்தால் மட்டுமே பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டதாகக் கருதப்படும். வாக்கெடுப்பு முடிந்தவுடன், எண்ணிக் கணிக்கும் முறைப்படி பெறப்பட்ட இறுதி முடிவை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.