☰
×

வோல்வோ முழு மின்சார சொகுசு கார் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

 

வோல்வோ கார் இந்தியா, தனது முதல் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனமான (SDV), முழு மின்சார சொகுசு எஸ்.யு.வி.  மாடல் இ.எக்ஸ்.90-ஐ ரூ. 1.26 கோடி என்ற எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப சலுகை விலைக்கு அறிமுகப்படுத்துகிறது.

வோல்வோ கார் இந்தியா (VOLVO CAR INDIA), தனது புதிய முழுமையான மின்சார சொகுசு முதன்மை எஸ்.யு.வி. (SUV) மாடலான இ.எக்ஸ்.90 (EX90)-ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 1.26 கோடி ஆகும். ஆறு இருக்கைகள் கொண்ட விசாலமான சொகுசு குடும்ப எஸ்.யு.வி.யாக வடிவமைக்கப்பட்டுள்ள இ.எக்ஸ்.90, இந்தியச் சந்தையில் வோல்வோ அறிமுகப்படுத்தும் முதல் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வாகனம் (Software Defined Vehicle – SDV) ஆகும். ஸ்காண்டிநேவியாவின் எளிமையான வடிவமைப்பு, வோல்வோவின் புகழ்பெற்ற பாதுகாப்புத் தரநிலைகள், சிறப்பான பயணத் தொலைவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த வாகனம், வோல்வோவின் புதிய எஸ்.பி.ஏ.2 (SPA2) தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இ.எக்ஸ்.90-க்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கான அனுபவ நிகழ்வுகள் மற்றும் சோதனை ஓட்டங்கள் 2026 நவம்பரில் தொடங்கும். வாகன விநியோகம் 2027 ஜனவரி முதல் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2026 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகச் சலுகையாக 11 கே.டபிள்யு. திறன் கொண்ட வால் பாக்ஸ் சார்ஜர் (11 kW Wall boc charger)  மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான சேவைத் தொகுப்பு வழங்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வோல்வோ கார் டீலர்ஷிப்கள் மூலம் 65 %  மறுவாங்குதல் சலுகையும் (buy back offer) வழங்கப்படுகிறது. 

இன்று (11 அக்டோபர் 2026) டெல்லியில் நடைபெற்ற 90-90 நிகழ்வில் பேசிய வோல்வோ கார் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் திரு. ஜோதி மல்ஹோத்ரா (Mr. Jyoti Malhotra) கூறியதாவது: “இ.எக்ஸ்.90 அறிமுகம் என்பது மின்மயமாக்கப்பட்ட மற்றும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட எதிர்காலத்தை நோக்கிய வோல்வோ கார் இந்தியாவின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த முதன்மை எஸ்.யு.வி., இணையற்ற வசதி, தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான பயணத் தொலைவு ஆகியவற்றின் மூலம் புதிய தலைமுறை வாகனப் போக்குவரத்தை அறிமுகப்படுத்துகிறது. பாதுகாப்பிற்கு முதன்மை அளித்து, மன நிம்மதியையும் ஸ்வீடன் சொகுசு அனுபவத்தையும் வழங்கும் சிறந்த சொகுசு குடும்ப எஸ்.யு.வி. இதுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

அதிநவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பும்

வோல்வோவின் மிகவும் புத்திசாலித்தன வாகனமாக உருவாக்கப்பட்டுள்ள இ.எக்ஸ்.90, என்விடியா டிரைவ் (NVIDIA DRIVE) தளம் மற்றும் குவால்காம் ஸ்னாப் டிராகன் 8155 (Qualcomm Snapdragon 8155) காக்பிட் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இதில் 14.5 அங்குல மையத் தொடுதிரை இடம் பெற்றுள்ளது. கூகுள் மேப்ஸ், யூடியூப் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட சேவைகளுடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட கூகுள் அமைப்பும், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இணையவழி மென்பொருள் புதுப்பிப்புகள் (Over-The-Air – OTA) தொடர்ந்து வழங்கப்படும்.

ஒரே மையக் கணினியைக் கொண்ட இ.எக்ஸ்.90, ஒரு வினாடிக்கு 254 முதல் 280 டிரில்லியன் செயல்பாடுகள் வரை செயல்படுத்தும் திறன் கொண்டது. இரட்டை மின்மோட்டார் அமைப்பு மற்றும் உயர் மின்னழுத்தம் கொண்ட 106 கே.டபிள்யூ.ஹெச். (106 kWh) லித்தியம்-அயன் பேட்டரியுடன் இயங்கும் இந்த எஸ்.யு.வி., 335 கே. டபிள்யு. 465 ஹெச்.பி. (335 kW - 456 hp) ஆற்றலையும், 670 என்.எம். (670 Nm) முறுக்குவிசையையும் வழங்குகிறது. மணிக்கு 0 முதல் 100 கி.மீ. வேகத்தை வெறும் 5.5 வினாடிகளில் எட்டுகிறது. டபுள்யு.எல்.டி.பி. (WLTP) தரநிலையின்படி 625 கி.மீ. வரை கணிக்கப்பட்ட பயணத் தொலைவையும், ஐ.சி.ஏ.டி. (ICAT) மதிப்பீட்டின்படி 725 கி.மீ. வரை பயணத் தொலைவையும் வழங்குகிறது.

பாதுகாப்பை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த முதன்மை எஸ்.யு.வி.-யில் ஐந்து கேமராக்கள், ஐந்து ரேடார்கள் மற்றும் 12 அல்ட்ராசோனிக் சென்சார்கள் இடம்பெற்றுள்ளன. 3 டி (3D) காட்சியுடன் கூடிய 360 டிகிரி கேமரா, பைலட் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், பயணிகளின் இருப்பைக் கண்டறியும் தொழில்நுட்பம் மற்றும் மோதலைத் தவிர்க்கும் அமைப்புகள் ஆகியவை பயணிகளையும், பாதசாரிகளையும் பாதுகாக்க உதவுகின்றன.

ஸ்காண்டிநேவிய கைவினைத் திறனுடன் கூடிய சொகுசு உட்புற வடிவமைப்பு

இ.எக்ஸ்.90-ன் உட்புறம் ஸ்காண்டிநேவியாவின் நேர்த்தியான வடிவமைப்பையும் உயர்தர கைவினைத் திறனையும் வெளிப்படுத்துகிறது. பின்னொளியுடன் கூடிய மர அலங்காரம், டான் (Dawn) நிறத்தில் காற்றோட்ட வசதியுடன் கூடிய நப்பா லெதர் இருக்கைகள், நான்கு மண்டல காலநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் பெரிய பனோரமிக் எலக்ட்ரோ-குரோமிக் சன்ரூஃப் ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.

ஆறு இருக்கைகள் கொண்ட கேப்டன் சீட் அமைப்பு, மூன்றாவது வரிசை இருக்கைகளுக்கு எளிதாகச் செல்லும் வசதி மற்றும் மின்சாரத்தில் மடக்கக்கூடிய பின்புற இருக்கைகள் ஆகியவை இடவசதியையும் பொருட்களை எடுத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கின்றன.

மேலும், 25-ஸ்பீக்கர் போகர்ஸ் & வில்கின்ஸ் பிராண்ட் உயர்தர ஒலி அமைப்பு (25-speaker Bowers & Wilkins high fidelity sound system) , 1,610 டபிள்யு (1,610 W) ஆற்றலுடன் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்குகிறது. டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பம் மற்றும் அபே ரோடு ஸ்டுடியோ (Abbey Road Studio) ஒலி முறைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

முக்கிய தொழில்நுட்ப விவரங்கள்:
- பரிமாணங்கள்: 
✓ நீளம் – 5,037 மி.மீ.; 
✓ அகலம் (கண்ணாடிகள் உட்பட) – 2,113 மி.மீ.; 
✓ உயரம் – 1,744 மி.மீ.
✓ வாகனத்தின் எடை: 2,504 முதல் 2,712 கிலோ வரை.
- இருவழி மின்னேற்ற வசதி (Bi-Directional Charging): மேம்பட்ட ஆற்றல் பகிர்வு வசதிகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- வெளிப்புற வண்ணங்கள்: டெனிம் ப்ளூ (Denim Blue), சாண்ட் டியூன் (Sand Dune), மல்பெரி ரெட் (Mulberry Red), கிரிஸ்டல் வைட் (Crystal White), ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) மற்றும் வேப்பர் கிரே (Vapour Grey) என ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது.

வோல்வோ கார் இந்தியா பற்றி

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாகிய வோல்வோ, 2009-ஆம் ஆண்டு இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. தற்போது, நாடு முழுவதும் 41 விற்பனை மற்றும் சேவை மையங்கள் மூலம் வோல்வோ கார் இந்தியா தனது வாடிக்கையாளர்களைச் சென்றடைகிறது.

டெல்லி என்.சி.ஆர். (NCR), மும்பை, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், புனே, அகமதாபாத், கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் அமைந்துள்ள இந்த மையங்கள், நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு விரிவான விற்பனை மற்றும் சேவை அனுபவத்தை வழங்குகின்றன.

ஊடகத் தொடர்பு: இராம்குமார் சிங்காரம், கேட்டலிஸ்ட் பி.ஆர்., @ + 98410 47455