தினமும் 10 சவரன் தங்கத்தை காற்றில் கக்கும் எரிமலை..!
அண்டார்டிகாவில் அமைந்துள்ள உலகின் தெற்கே உள்ள மிகத் தீவிரமான மவுண்ட் எரபஸ் (Mt. Erebus) எரிமலை, தினசரி சுமார் 80 கிராம் (ஏறத்தாழ 10 சவரன்) எடையுள்ள தங்கத் துகள்களைக் காற்றில் கக்கி வருவதாக விஞ்ஞானிகளின் ஆய்வில் வியப்பூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.
நாசா (NASA) மற்றும் புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த எரிமலை உமிழும் வாயுக்களுடன் கலந்து வெளியேறும் இந்தத் தங்கத் துகள்களின் ஓராண்டு மதிப்பு சுமார் 22 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் ₹18 கோடிக்கும் அதிகம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. தனித்துவமான இந்த எரிமலையிலிருந்து காற்றில் பரவும் நுண்ணிய தங்கத் துகள்கள், சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணித்து அண்டார்டிகாவின் சுற்றியுள்ள பனிப்பாறைகளின் மேல் படிந்திருப்பது கண்டறியப்பட்டு, உலகளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டார்டிகாவின் ராஸ் தீவில் (Ross Island) அமைந்துள்ள மவுண்ட் எரெபஸ், ஒரு நிரந்தர லாவா ஏரியைக் கொண்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு 'ஜியோபிசிகல் ரிசர்ச் லெட்டர்ஸ்' இதழில் வெளியான ஆய்வின்படி, இந்த எரிமலை ஒவ்வொரு நாளும் காற்றில் சுமார் 80 கிராம் அளவுக்கு மிக நுண்ணிய தங்கப் துகள்களை வெளியிடுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தற்போதைய சர்வதேச தங்க விலையின்படி, இந்த எரிமலை காற்றில் தெளிக்கும் தங்கத்தின் மதிப்பு ஒரு நாளைக்குச் சுமார் ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும். அதாவது வருடத்திற்குச் சுமார் ரூ.25 கோடிக்கும் அதிமான மதிப்புள்ள தூய தங்கத்தை இது காற்றில் பறக்கவிடுகிறது
எரிமலையிலிருந்து வெளியாகும் வாயுக்களுடன் கலந்து வரும் இந்தத் தங்கப் துகள்கள், சாதாரண தூசி வடிவில் இருப்பதில்லை. எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலம் ஆராய்ந்தபோது, அவை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 60 மைக்ரோமீட்டர் அளவுள்ள குட்டி குட்டி தங்கப் படிகங்களாக இருப்பது தெரிந்தது.
இந்தத் தங்கப் துகள்கள் காற்றில் கலந்து, எரிமலையிலிருந்து சுமார் 1,000 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்து, அண்டார்டிகாவின் பனிப்பாறைகள் மீது மெல்லப் படிகின்றன.
எரிமலை வாயுக்களில் தங்கம் கலந்திருப்பது ஒன்றும் உலகிற்குப் புதிய விஷயமல்ல. ஹவாயில் உள்ள கிலாவியா (Kīlauea), இத்தாலியின் மவுண்ட் எட்னா (Mount Etna) போன்ற எரிமலைகளிலும் சிறிய அளவில் தங்கம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக, எரிமலையின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் தங்கம், குளோரின் அல்லது சல்பர் போன்ற சேர்மங்களுடன் இணைந்து, கடுமையான வெப்ப வாயுக்களாக மேலே தள்ளப்படுகிறது. இந்த வாயுக்கள் வளிமண்டலக் காற்றில் பட்டு குளிர்ச்சியடையும் போது, தங்கம் தனியாகப் பிரிந்து படிகங்களாக மாறுகிறது.