×

உதயநிதியை கைது செய்தது போல நடிகைகள் பற்றி தவறாக பேசும் யூடியூபர்கள் மீது நடவடிக்கை தேவை- விஷால்

 

நடிகைகள் பற்றி தவறாக பேசும் யூடியூபர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் விஷால் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் விஷால், “தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக பல்வேறு பேச்சுக்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தால் முதலில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் சேவை என்பது சாதாரண விஷயம் இல்லை. தனுஷ் சிறந்த நடிகர், இயக்குநர். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் சினிமா மேலும் ஒரு சிறந்த நடிகரை இழக்கும். என் நண்பர் உதயநிதி தவறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளியே வந்தார். அதேபோல், பல யூடியூபர்கள் பணத்திற்காக நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தவறாக பேசி வருகின்றனர். உதயநிதி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தது போல, நடிகைகள் பற்றி தவறாக பேசும் யூடியூபர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இயக்குநர் மிஷ்கின் சார் என்னிடம் ஒரு கதையைச் சொல்லி, ஹீரோவாக நடிக்க அழைத்தால், நிச்சயமாக அதில் நடிப்பேன். ஆனால், தயாரிப்பாளராக ஒரு படத்தை மிஷ்கின் சாருடன் இணைந்து தயாரிக்க மாட்டேன்.அந்த நேரத்தில் சில தவறுகள் நடந்துவிட்டன. அவற்றை சரி செய்துகொள்ள முடியும். ஆனால், மிஷ்கின் சார் எங்கு இருந்தாலும் என்னைப் பற்றி நல்லதையே நினைப்பார். சினிமாவில் இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜம்தான்” இவ்வாறு கூறினார்.