×

தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் அறிவிப்பு..! 

 

கோபி யூனியன் கலிங்கியம் பஞ்., தங்கமலைக்கரடு கிராமத்தில், 300 குடும்பங்களை சேர்ந்த, 750 பேர் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலி தொழிலாளர்கள். கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி மற்றும் கல்லுாரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், ௨.௫ கி.மீ., துாரம் நடந்து அல்லது டூவீலரில்தான் செல்ல வேண்டும். 

கீழ்பவானி கிளை வாய்க்கால் கரையில் உள்ள பிரதான சாலை, 10 ஆண்டுகளுக்கு முன், 500 மீட்டர் நீளத்துக்கு தார்ச்சாலையாக அமைத்தனர். எஞ்சிய மண் சாலை கரடு முரடாக, குண்டும் குழியாக உள்ளது. தார்ச்சாலையும் சீரமைக்கப்டாமல் சேதமடைந்து விட்டது. இதனால் அவ்வழியே பயணிக்கும், சின்னக்குளம், செல்லிபாளையம், கணபதிபாளையம், கரட்டுப்பாளையம், கலிங்கியம் பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். 

கலெக்டர் வரை மனு கொடுத்தும், சாலை மறியலில் ஈடுபட்டும் நடவடிக்கை இல்லை.இதனால் தங்கமலைக்கரடு கிராம மக்கள், அரசு தங்களை புறக்கணித்து விட்டதாகவும், அதனால் தாங்களும், 2026 சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்னர். 

இதுகுறித்து ஊர் நடுவிலும், வேட்டைக்காரன்கோவில் பிரிவு என இரு இடங்களில், நேற்று பிளக்ஸ் பேனர் வைத்து அறிவிப்பு செய்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்ட மக்கள், வேட்டைக்காரன் கோவில் பிரிவில் நேற்று காலை திரண்டு, தேர்தலை புறக்கணிப்பதாக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.