உங்களுடன் ஸ்டாலின் முகாமில் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..!
தமிழகம் முழுவதும் 10ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த முகாமில் தினந்தோறும் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாரதி. இவர் தனது பெயரில் உள்ள இடம், மற்றும் இவரது மாமியார் காந்திமதி பெயரில் உள்ள இடம் இரு இடங்களில் ஒரு இடத்துக்கு பட்டா மாற்றமும், மற்றொரு இடத்துக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும் கோரி இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
பெயர் மாற்றம் செய்ய 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிபாரதி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வேதிப் பொருட்கள் தடவிய 30 ஆயிரம் ரூபாயை ரவிபாரதியிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ்விடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், கொழுமனிவாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த வி.ஏ.ஓ. ராபர்ட் ராஜ் லஞ்ச பணத்தை வாங்க ஆர்வமுடன் வந்தபோது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.