'வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும்' - விஜய்க்கு வாழ்த்து கூறிய தாய் ஷோபா சந்திரசேகர்..
வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும் என தவெக தலைவர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் , முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து களப்பணி ஆற்றி வருகிறது. அந்தவகையில் தென்மாவட்டங்களை மையப்படுத்தி அக்கட்சியின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெற இருக்கிறது.
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரபத்தி என்னுமிடத்தில் மிக பிரம்மாண்டமாக இன்று பிற்பகல் 3.15 மணிக்கு தொடங்கி இரவு 7.25 மணி வரை மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இரவு முதலே தொண்டர்கள் மதுரையில் குவிந்து வருகின்றனர். காலை 8 மணியளவிலேயே அரங்கம் முழுவதும் மக்கள் தலைகளாக காட்சியளிக்கின்றன.
இந்த நிலையில், விஜய்க்கு அவரது தாய் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி, தங்கைகள், அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியைக் காட்டும். நீ அரியணை ஏறும் நாள் வரும். அது உன் தொண்டர்களின் திருநாள். தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு, நேர்மையான தலைவன் என்பதற்கு நீதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர்கள் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை” என்று தெரிவித்துள்ளார்.