×

விஜய் சொன்ன திமுக திருக்குறள்..! திருவள்ளுவர் இருந்தால் இப்படித்தான் பாடியிருப்பார்: த.வெ.க விஜய்..!

 

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா இன்று பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட கட்சித் தலைவர் விஜய், அஞ்சலையம்மாள், வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும், தொகுதிவாரியான பணிகள் குறித்தும் பேசினார்.

1977ஆம் ஆண்டு ஜூன் மாதம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் ரேடியோவில் பேசினார். அப்போது ‘பேரறிஞர் அண்ணா அமர்ந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமர்ந்திருக்கிறார்களே என்று எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தேன். அன்றைக்கு தொடங்கியதுதான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று கூறினார். அதேபோல் 2017 மற்றும் 2021க்கு பிறகு தமிழ்நாட்டின் நிலைமையை பற்றி யோசித்து பார்க்கிற நமது மக்கள், காமராசர், அண்ணா, எம்ஜிஆர் போன்றோர் இருந்த இடத்தில் இப்படிப்பட்டவர்களும் அமரும் நிலை ஏற்பட்டு விட்டதே என்று கண்ணீர் வடித்தனர். இன்றைய மக்களின் கண்ணீரை துடைக்க தொடங்கப்பட்டதுதான் தமிழக வெற்றிக் கழகம் என்று விஜய் தனது உரையை ஆரம்பித்தார்.

அவர் பேசுகையில், “எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்தபோதும், அவர் தேர்தலில் ஜெயித்தபோதும்கூட ஏதோ ஒரு நடிகர் கட்சி தொடங்கி இருக்கிறார் என அவர்மீது விமர்சனங்களை வைத்தார்கள். அதேபோன்று நான் இப்போது அரசியலுக்கு வந்ததை பலர் விமர்சிக்கின்றனர். எம்ஜிஆருக்கு 20 வருடங்கள் திமுகவில் இணைந்து பணியாற்றிய அரசியல் அனுபவம் இருந்தது. ஆனால் விஜய்க்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்கின்றனர்.

அன்றைக்கு எம்ஜிஆரை அரசியல் அடிச்சுவடு தெரியாதவர், கவர்ச்சியை மட்டுமே நம்பி இருக்கிறவர், அட்டகத்தி, வாய் விளம்பர வள்ளல், கேள்வி மட்டுமே கேட்க தெரிந்தவர், பதில் கூற தெரியாததால் நிருபர்களை சந்திக்க மாட்டார், டெல்லியை பகைத்துக்கொள்ள மாட்டார் என்பது போன்ற விமர்சனங்களை முன்வைத்தார்கள். அவருடைய தொண்டர்களையும் சேர்த்து கேலியும் கிண்டலுமாக விமர்சித்தனர். ஆனால் இதையெல்லாம் அமைதியாக கவனித்த மக்கள் அவரை ஜெயிக்க வைத்தார்கள்.

அவர் ஜெயித்தபிறகு அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட ‘கோட்டை’ என்பது பகல் கனவாகவே மாறிவிட்டது. காமராசருக்கும் இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாது என்று கிண்டல் செய்தனர். அவர்கள் செய்கிற தவறுகளையும் ஊழலையும் எடுத்துச் சொன்னால் நம்மையும் 1977 பாணியிலேயே விமர்சிக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்கிற தவறுகளை வெளியே சொல்லாமல் இருக்க முடியாது. கண்டிப்பாக சொல்வோம். அவர்களை எதிர்க்கிற தைரியமும் துணிவும் மக்களின் பிரதிநிதியாகிய நமக்குதான் இருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் தீய சக்தியை பற்றி என்ன திருக்குறள் எழுதியிருப்பார் என்பதை ஒரு கற்பனையாக சொல்கிறேன்.

’அநீதி அராஜகம் தில்லுமுள்ளு இவையெல்லாம்

திமுக முதற்றே உலகு’

என்று எழுதியிருப்பார்” என்றதும், அங்கு கூடியிருந்த நிர்வாகிகள் அனைவரும் விசிலடித்து கரகோஷம் எழுப்பி மீண்டும் கூறுமாறு கேட்டுக்கொண்டனர்.