×

சேலத்தில் நடைபெறும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி..!

 

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் கூட்டம் நடத்த அனுமதி கோரி, த.வெ.க. மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் த.வெ.க. நிர்வாகிகள், காவல் ஆணையர் அனில்குமார் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனர். ஆனால், அரசு வழிகாட்டுதல்படி வழிமுறைகள் குறிப்பிடப்படவில்லை என்று தெரித்து அந்த மனு காவல் துறை சார்பில் நிராகரிக்கப்பட்டது.

முன்னதாக, சேலம் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள காளிகவுண்டம்பாளையம் பகுதி திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்துக்கு அனுமதி கோரி, மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் ஒன்றியச் செயலாளர் கார்த்தி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனு அளித்திருந்தார். இந்த மனு காவல் துறை பரிசீலனையில் இருந்தது.

இதனிடையே, சீலநாயக்கன்பட்டி தாளமுத்து நடராஜன் திடலில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்த அனுமதி கேட்டு, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் த.வெ.க. நிர்வாகிகள் மீண்டும் மனு அளித்தனர். அந்த மனுவில், விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் 5 ஆயிரம் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தை பல்வேறு நிபந்தனைகளுடன் நடத்த, சேலம் மாநகர காவல் துறை அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. 5000 பேருக்கு மேல் பங்கேற்க மாட்டார்கள் என த.வெ.க.வினர் உத்தரவாதம் அளித்த நிலையில், காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் கருவுற்றப் பெண்கள் கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது, அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சேலம் மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வரும் பிப். 13 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்துக்கு பகல் 12 மணி முதல் 3 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.