×

பெரம்பூரில் விஜய் பிரச்சாரம்: ரோடு ஷோவுக்கு அனுமதியில்லை..!

 

பெரம்பூரில் 28-ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்க உள்ளார் தவெக தலைவர் விஜய்.இதற்காக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையாக அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலத்தில் துவங்கும் பிரச்சாரம்,  வியாசர்பாடி முல்லை நகர் பகுதியில் விஜய் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு அந்தப் பகுதியில் 3000 பேர் கூடுவார்கள் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் அந்த இடத்தில் அதிகப்படியான நபர்கள் வந்தால் அந்த இடம் பாதுகாப்பாக இருக்குமா என்று போலீசார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கூடுதல் காவல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர் அடங்கிய குழுவினர் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் சம்பந்தப்பட்ட இடத்தில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையாக போலீசார் அதை எவ்வாறு வடிவமைத்து ஒழுங்கு படுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி உள்ளனர். கரூர் சம்பவம் போன்று எந்த ஒரு வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் போலீசார் முழு கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. 

ரோடு ஷோவுக்கு எந்த ஒரு கட்சிக்கும் அனுமதியில்லை என ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அதன்படி விஜய்க்கும் ரோடு ஷோ செல்ல அனுமதி இல்லையென தகவல் வெளியாகியுள்ளது.