×

செய்தியாளர்களை தாக்கிய விஜயின் பவுன்சர்கள்! திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு

 

காரைக்குடியில் தனது பரப்புரையை முடித்துக் கொண்டு சென்னை திரும்புவதற்காக திருச்சி விமான நிலையத்திற்குள் நுழைந்த நடிகர் விஜய்யிடம்  பேட்டி காணப் பத்திரிகையாளர்கள் முற்பட்டனர். அப்போது விஜய்யுடன் வந்த அவரது பவுன்சர்கள், செய்தி சேகரிக்க வந்த ஊடகத்தினரை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு, சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். 

இந்த எதிர்பாராத தள்ளுமுள்ளுவில் பத்திரிகையாளர்கள் பலமாகத் தாக்கப்பட்டதால் அங்குப் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. செய்தி சேகரிக்க முயன்ற பத்திரிகையாளர்களை இவ்வாறு தாக்குவது ஏன் என அங்கு நேரில் பார்த்த பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் அதிருப்தியும் எழுந்துள்ளது.ஒரு அரசியல் தலைவராக மக்களின் ஆதரவைக் கோரி வரும் நிலையில், செய்தி சேகரிக்க வரும் பத்திரிகையாளர்களைத் தனியார் பாதுகாவலர்களைக் கொண்டு தாக்குவது எந்த விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். பத்திரிகையாளர்கள் மீதான இந்த அத்துமீறலுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.